பிரதமர் மோடி தனது பேட்டியில் ஆணவத்தை மட்டுமே வெளிப்படுத்தியிருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ரண்தீப் சுர்ஜேவாலா விமர்சித்துள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் மோடி ஏ.என்.ஐ. ஊடகத்திற்கு பேட்டியளித்தார். ராமர் கோவில் விவகாரத்தில் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது என்று சுட்டிக்காட்டினார். இதனால், சட்ட நடைமுறைகளுக்கு பின்னரே அதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.
ரிசரவ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து உர்ஜித் படேல் விலகியது அரசியல் நிர்பந்தம் எதுவும் இல்லை என்றும் ஆறேழு மாதங்களுக்கு முன்பாகவே விலக போவதாக அவர் தெரிவித்தாக பிரதமர் மோடி கூறினார்.
இந்நிலையில், பிரதமர் மோடி தனது பேட்டியில் ஆணவத்தை மட்டுமே வெளிப்படுத்தியிருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ரண்தீப் சுர்ஜேவாலா விமர்சித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, ஊடகங்கள், பத்திரிகைகள் எழுப்பி வரும் எந்த கேள்விக்கும், பிரதமர் மோடி எந்த பதிலும் அளிக்கவில்லை என்றார். தன்னைச் சுற்றி மட்டுமே பிரதமர் மோடி அரசியல் செய்வதாகவும் ரண்தீப் சுர்ஜேவாலா தெரிவித்தார்.
நியாயமான கேள்விகளுக்கும், மக்கள் படும் அவதிகளுக்கும், மோடியிடம் எந்த பதிலும் இல்லை என அவர் கூறினார். நான், எனது, எனக்கு, எனது செயல்பாடு என்ற அளவில் மட்டுமே அவரது பேட்டி அமைந்து இருந்ததாக அவர் தெரிவித்தார்.