அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுக்கு கொரோனா பாதிப்பு!

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முக்கிய ஆலோசகரான ஹோப் ஹிக்ஸ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனையின் முடிவில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

அதனைத் தொடர்ந்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிபர் டிரம்ப், தானும், தனது மனைவியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து இருவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், இருவரும் இணைந்து கொரோனாவை எதிர்கொள்ளப் போவதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் ஜோ பைடன் உடன் நடந்த நேருக்கு நேர் விவாத நிகழ்ச்சியில், அதிபர் டிரம்ப் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப் விரைவில் குணமடைய, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், நண்பர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா, விரைவில் நலம்பெற்று ஆரோக்கியமாக மீண்டு வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version