கேரள முதலமைச்சருடன் நடத்த உள்ள பேச்சுவார்த்தையால் தமிழக- கேரள மாநில மக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறுவர் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகம் – கேரளம் இடையிலான நீர்ப்பாசனத் திட்டங்கள் குறித்துக் கேரள முதலமைச்சருடன் பேச்சு நடத்துவதற்காகத் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அவருடன் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் சென்றுள்ளனர்.
விமான நிலையத்தில் அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் முதலமைச்சருக்குப் பூங்கொத்துக் கொடுத்து வழியனுப்பி வைத்தனர். திருவனந்தபுரத்துக்குப் புறப்படும் முன்பு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் – கேரளம் இடையிலான அனைத்து நீர்ப்பாசனத் திட்டங்கள் குறித்தும் கேரள முதலமைச்சருடன் பேச்சு நடத்த உள்ளதாகவும் இதன்மூலம் இரு மாநில மக்களும் பயன்பெறுவார்கள் எனவும் தெரிவித்தார்.
மேலும், அண்டை மாநிலங்களுடன் தமிழகம் நல்லுறவைப் பேணி வருவதாகவும், அதனால்தான் தமிழகத்தின் வேண்டுகோளை ஏற்று ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து சென்னையின் குடிநீர்த் தேவைக்காகத் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.
Discussion about this post