சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களுக்கான தகவல்களை அளிக்கும் நோக்கில் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் செயல்படுத்தப்படவுள்ள “TNSMART” என்ற செயலியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிமுகம் செய்து வைத்தார்.
இதேபோல், டெல்லி தமிழ் சங்கம் சார்பில் தமிழக அரசின் 5 கோடி ரூபாய் நிதியுதவியில் கட்டப்பட்டுள்ள பள்ளியை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் செய்தித்துறை சார்பில், ஒரு கோடியே 34 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள பா.சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டப அடிக்கல் நாட்டு விழாவையும் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 3 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புறநோயாளிகள் பிரிவு கட்டடம் மற்றும் சீமாங்க் மைய அறுவை அரங்கம் ஆகியவற்றை காணொலி மூலம் திறந்து வைத்தார்.
நிலத்தின் வகைபாடுகளை அறிந்துகொள்வதற்கு ஏதுவாக வருவாய் துறையின் இ-அடங்கல் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
Discussion about this post