சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு முதலமைச்சர் விருது

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஆயுதப்படை மைதானத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு, “தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கங்கள்” வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பாக பணிபுரிந்த ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கு சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் “தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கங்களை” வழங்கி கெளரவித்தார்.

சட்டம் ஒழுங்கு போலீசார், குற்ற பிரிவு போலீசார், போக்குவரத்து மற்றும் போக்குவரத்து புலனாய்வு போலீசார், சென்னை மத்தியக்குற்றபிரிவு, பொருளாதார குற்றபிரிவு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு, சென்னை நுண்ணரிவுப்பிரிவு, உயர் நீதிமன்ற பாதுகாப்பு பிரிவு, முதலமைச்சர் பாதுகாப்பு பிரிவு, மோப்ப நாய் படை பிரிவு, நவீன காவல் கட்டுப்பாட்டறை, விபசாரதடுப்பு பிரிவு, பணியிடை பயிற்சி மையம், சிறுவர் நல காவல் பிரிவு, போதை பொருள் தடுப்பு பிரிவு, ஊழல் மற்றும் கண்காணிப்பு துறை, தனிப்பிரிவு குற்ற புலனாய்வு பிரிவு ஆகிய காவல் பிரிவுகளில் பத்து ஆண்டுகள் துறை ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கபடாமல் சிறப்பாக பணியாற்றிய ஆண் ,பெண் உள்ளிட்ட 642 காவலர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டது. அவர்களில் 591 காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்சியில் காவல் தெற்கு கூடுதல் ஆணையர் கண்ணன், வடக்கு கூடுதல் ஆணையர் செந்தில் குமார், போக்குவரத்து கூடுதல் ஆணையர் பிரதீப் குமார். மத்தியகுற்றபிரிவு கூடுதல் ஆணையர் தேன்மொழி உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

விருதுகளை வழங்கிய பின்னர் மேடையில் பேசிய பெருநகர சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்.

10 ஆண்டு காலமாக எந்த தவறும் இழைக்காத காவலர்களுக்கு இன்று பதக்கம் வழங்கப்பட்டது, இதே போன்று அனைத்து காவலர்களும் பணிபுரிய வேண்டும் என அவர் பேசினார்.

காவல்துறையில் உயரிய பதவியில் உள்ளவர்கள் மட்டுமில்லாமல் அனைத்து நிலை காவலர்களும் ஒன்றிணைந்து உழைத்தால் தான் காவல்துறைக்கு இன்னும் சிறப்பு பெயர் கிடைக்கும் என்று பேசிய அவர், மேலும் கொரோனா சூழ்நிலையில் காவலர்கள் உடல்நலம் மட்டுமில்லாமல் மன உறுதியோடு பணியாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

95 சதவிகிதம் காவலர்களுக்கு கொரோனா தடுப்புஊசி முதல் தவணை போடப்பட்டுள்ளது எனவும் மேலும், சென்னை மாநகரின் அனைத்து காவலர்களும் சிறப்பாக பணியாற்றி தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக, தமிழகத்தை பொறுத்துவரையில் இதே போன்று பத்து ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றிய பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கம் கிடைக்கப் பெறவில்லை என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் தகுதி இருந்தும் பதக்கம் பெறாத காவலர்கள் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றால் இந்தப் பதக்கமும், இதனால் கிடைக்கக்கூடிய சலுகையும் கிடைக்காது எனவும் பதக்கம் பெறாத சில காவலர்கள் வருத்தம் தெரிவித்தனர். உடனடியாக தமிழக முதல்வர் இதனை கருத்தில் கொண்டு தகுதி உள்ள நபர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விருது வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

Exit mobile version