மாயமான கைக்குழந்தை 8 வயது சிறுவனாக மீட்பு !

சென்னை அடுத்த திருமுல்லைவாயில், எட்டியம்மன் நகரில் வசித்து வருபவர்கள் பெயிண்டர் ஜான் ஜெபராஜ் – தமிழரசி தம்பதி. கடந்த 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், அந்த தம்பதிக்கு அயனாவரம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஒரு மாதம் கழித்து, குழந்தையை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது தமிழரசியிடம் அறிமுகமான அடையாளம் தெரியாத பெண், வீடு தேடுவது போல அவருடன் சென்றுள்ளார். அப்போது தமிழரசியை ஏமாற்றி, கைக்குழந்தையை கடத்திச் சென்றது தொடர்பாக, திருமுல்லைவாயல் போலீசில் ஜான் ஜெபராஜ் புகார் அளித்துள்ளார். ஆனால், கடத்தப்பட்ட குழந்தை மீட்கப்படாமல் காலம் ஓடிக் கொண்டிருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக அண்ணாநகர் பகுதியில் வேலைக்கு சென்ற ஜான் ஜெபராஜ், தனது குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை பார்த்துள்ளார். ஆனால், அந்தப் பெண்ணோ ஜான் ஜெபராஜை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அப்போது, அந்தப் பெண்ணை புகைப்படம் எடுத்துக் கொண்ட ஜான் ஜெபராஜ், மீண்டும் திருமுல்லைவாயில் போலீசில் போட்டோவை அளித்து புகார் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தனிப்படை அமைத்து பெண்ணின் புகைப்படத்தை கொண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டவர்களுக்கு வில்லிவாக்கம் காவல்நிலையத்தில் அந்தப் பெண் குறித்து தகவல்கள் கிடைத்தது. புழல் பகுதியைச் சேர்ந்த தேவி எனும் அந்தப் பெண், குழந்தை கடத்தலை தொழிலாக கொண்டவராவார். ஜான் ஜெபராஜ் – தமிழரசி தம்பதியின் குழந்தையை கடத்திய பின்னர், வில்லிவாக்கம் பகுதியில் குழந்தைக் கடத்தலில் ஈடுபட்டபோது குழந்தை ஒன்று இறந்துள்ளது. அந்த சம்பவத்தில் வில்லிவாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்ட தேவிக்கு, 6 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அப்போது தேவியோடு இருந்த நபர், 1 வயதுக்கு மேலாகியிருந்த ஜான் ஜெபராஜின் குழந்தையை தன்னால் வளர்க்க முடியாது என்று போலீசில் ஒப்படைக்கவே, அவர்கள் தியாகராய நகரில் உள்ள அரசு காப்பகத்தில் குழந்தையை ஒப்படைத்துள்ளனர்.

தனிப்படை போலீசாரின் விசாரணையில் கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து குழந்தை கடத்தலில் ஈடுபட்ட பழைய புகாரில் தேவியை போலீசார் கைது செய்தனர். மேலும் கைக்குழந்தையாய் காணாமல் போய் 8 வயதில் காப்பகத்தில் மீட்கப்பட்ட சிறுவனை பெற்றோருக்கு அறிமுகம் செய்து வைத்தனர். காணாமல் போன குழந்தை சிறுவனாய் கிடைத்தது குறித்து பெற்றோர் மகிழ்ச்சி கண்ணீர் வடித்த நிலையில், சட்டப்படி சிறுவனை ஜான் ஜெபராஜ் தம்பதியிடம் சேர்த்தும் வைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version