காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் நடைபெற்ற நிலையில் தமிழகத்திற்கு கர்நாடக வழங்க வேண்டிய நீரின் அளவு குறித்து பார்க்கலாம்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட, காவிரி மேலாண்மை ஆணையம் வழங்கிய உத்தரவில் தமிழகத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் 177.25 டி.எம்.சி நீர் திறந்துவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் மாதம் 9.19 டி.எம்.சி நீரும், ஜூலை மாதம் 31.24 டி.எம்.சி நீரும், ஆகஸ்ட் மாதம் 45.95 டி.எம்.சி நீரும், செப்டம்பர் மாதம் 36.76 டி.எம்.சி நீரும் தமிழகத்துக்கு வழங்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அக்டோபர் மாதம் 20.22 டி.எம்.சி நீரும், நவம்பர் மாதம் 13.78 டி.எம்.சி நீரும், டிசம்பர் மாதம் 7.35 டி.எம்.சி நீரும், ஜனவரி மாதம் 2.76 டி.எம்.சி நீரும், பிப்ரவரி முதல் மே மாதம் வரை 2.5 டி.எம்.சி நீரும் வழங்க வேண்டும் என்றும் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக அரசு குடிநீர் தேவைக்கு மட்டுமே தண்ணீர் இருப்பதாக கூறி தமிழகத்திற்கு நீர் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுத்தி வருவதாகவும், ஜூன் 12-ம் தேதி கர்நாடகா தண்ணீர் திறந்துவிட்டால் மட்டுமே, விவசாயிகள் குறுவை சாகுபடியை மேற்கொள்ள முடியும் என்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தி உள்ளது.