லட்சக்கணக்கான மக்கள் அலைகடலென திரண்டு வந்து தரிசனம் செய்து வரும் அத்திவரதர் நாளை மீண்டும் அனந்தசரஸ் குளத்திற்குள் வைக்கப்படுகிறார். இதையடுத்து 40 ஆண்டுகள் கழித்து மீண்டும் 2059 ஆம் ஆண்டுதான் அத்திவரதரை தரிசிக்க முடியும்.
காஞ்சிபுரம் அனந்தசரஸ் குளத்தில் 40 ஆண்டுகளாக நீருக்கு அடியில் உள்ள பாதாள அறையில் அத்திவரதர் இருந்தார். கடந்த 1979-ல் எழுந்தருளிய அத்திவரதர், மீண்டும் 40 ஆண்டுகள் கழித்து கடந்த ஜூலை மாதம் 1-ஆம் தேதி எழுந்தருளினார். 48 நாள் அத்திவரதர் வைபவத்தை ஒட்டி காஞ்சிபுரம் விழா கோலம் பூண்டது.
விண்ணை முட்டும் அளவிற்கு “கோவிந்தா” கோஷம் எழுப்பி பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். முதல் 31 நாட்கள் சயன கோலாத்தில் அருள்பாலித்த அத்திவரதர், ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிற பட்டாடையில் அத்திவரதரை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
தொடக்கத்தில் நாளொன்றுக்கு ஒரு லட்சம் பேர் தரிசனம் செய்து வந்த நிலையில், அத்திவரதர் குளத்திற்குள் செல்லும் நாள் நெருங்க நெருங்க பக்தர் கூட்டம் அலைமோதியது. நாளொன்றுக்கு 5 முதல் 6 லட்சம் பேர் அத்திவரதரை தரிசனம் செய்தனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வெளி மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள், சினிமா பிரபலரங்கள் என அனைத்து தரப்பினரும் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.
அத்திவரதரை தரிசிப்பதற்கான பொது தரிசனம் இன்றுடன் நிறைவடைகிறது. நாளை ஆகம விதிகளின் படி பூஜைகளுக்கு பிறகு அனந்தசரஸ் குளத்தில் மீண்டும் அத்திவரதர் வைக்கப்படுகிறார். இதையடுத்து 40 ஆண்டுகள் கழித்து வரும் 2059-ஆம் ஆண்டு அத்திவரதர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார்.