அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்

காஞ்சிபுரத்தில் 47 நாட்கள் கோலாகலமாக நடைபெற்ற அத்திவரதர் வைபவம் நிறைவு பெற்றதை தொடர்ந்து, பூஜைகளுக்கு பிறகு அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் வைக்கப்பட்டார்.

காஞ்சிபுரத்தில் உள்ள புகழ்பெற்ற வரதராஜர் பெருமாள் கோயிலில் உள்ள அனந்தசரஸ் குளத்திற்குள் இருந்து 40 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜூலை 1-ம் தேதி அத்திவரதர் எழுந்தருளினார். அன்று முதல், கடந்த வெள்ளிக்கிழமை வரை 47 நாட்கள் அத்திவரதர் தினந்தோறும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாடு முழுவதிலும் இருந்து 1 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை வழிபட்டனர். ஜூலை 1-ம் தேதி முதல் சயனகோலத்திலும், பின்னர், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 16ம் தேதி வரை நின்ற கோலத்திலும் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதையடுத்து, 48-வது நாளான நேற்று அனந்தசரஸ் குளத்தில் உள்ள பாதாள அறையில் அத்திவரதரை வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. இதற்காக இலவங்கம், கற்பூரம் போன்ற மூலிகைகளால் தைலகாப்பு அரைக்கப்பட்டு, அத்திவரதர் அலங்கரிக்கப்பட்டார். பின்னர், அனந்தசரஸ் குளத்தில் மேற்குபக்கம் உள்ள ஆதிசேஷன் அருகே தலையும் கிழக்கு பக்கமாக பாதமும் இருக்குமாறு அத்திவரதர் எழுந்தருளச் செய்யப்பட்டார்.

அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அர்ச்சகர்கள் அத்திவரதரை அனந்தசரஸ் குளத்திற்கு எடுத்துச் சென்றனர். இதையடுத்து வரதராஜப் பெருமாள் கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. இந்தநிலையில், 40 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2 ஆயிரத்து 59ம் ஆண்டு அனந்தசரஸ் குளத்திற்குள் இருந்து அத்திவரதர் மீண்டும் எழுந்தருள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version