அத்திவரதர் வைபவத்திற்கான பொது தரிசனம் இன்றுடன் நிறைவு

காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசனம் செய்வதற்கான பொது தரிசனம் இன்றுடன் நிறைவடைகிறது. ஆகம விதிகளின் படி, பூஜைகள் செய்யப்பட்டு அத்திவரதர் நாளை மீண்டும் அனந்தசரஸ் குளத்திற்குள் வைக்கப்படுகிறார்.

காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் ஜூலை மாதம் 1-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும் என்பதால், அத்திவரதரை தரிசிக்க நாளுக்கு நாள் பக்தர் கூட்டம் அலைமோதியது.

46 நாளில் மட்டும் 90 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். வி.ஐ.பி., வி.வி.ஐ.பி. டோனர் பாஸ் வைத்திருப்பவர்களுக்கான தரிசனம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, இந்த தரிசனம் முறைக்கு இன்று அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

பொது தரிசனம் முறை இன்றுடன் நிறைவடைகிறது. நாளை அத்திவரதர் தரிசனம் ரத்து செய்யப்பட்டு மாலை அல்லது இரவுக்குள் ஆகம விதிகளின் படி பூஜை செய்யப்பட்டு, அத்திவரதர் மீண்டும் அனந்தசரஸ் குளத்திற்குள் வைக்கப்படுகிறார்.

Exit mobile version