மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக வங்கதேசம் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் 23-வது லீக் போட்டியில், ஜேசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி, மோர்தசா தலைமையிலான வங்கதேச அணியை எதிர்கொண்டது. டாண்டனில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம், பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதனையடுத்து எவின் லீவிஸுடன் ஜோடி சேர்ந்த ஷாய் ஹோப் வங்கதேச வீரர்களின் பந்து வீச்சை திறம்பட எதிர்கொண்டு ரன்களை சேர்த்தனர்.

2-வது விக்கெட்டுக்கு 116 ரன்கள் சேர்த்த நிலையில், லீவிஸ் 70 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களம் இறங்கிய பூரன் 25 ரன்னில் ஆட்டமிழக்க அதிரடியாக ஆடிய ஹிம்ரோன் ஹெட்மைர் 26 பந்துகளில் 50 ரன்கள் குவித்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனையடுத்து நிதானமாக விளையாடிய ஷாய் ஹோப் 96 ரன்களில் ஆட்டமிழக்க 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த மேற்கிந்திய தீவுகள் 321 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 322 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி வங்கதேசம் பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் தமிம் இக்பால் 48 ரன்னிலும் சவும்யா சர்கார் 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து களம் இறங்கிய முஷ்ஃபிகுர் ரஹிம் 1 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இந்நிலையில் ஷகிப் அல்ஹசன், லிடன் தாஸ் ஆகியோர் மேற்கிந்திய தீவுகள் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ரன்களை குவித்தனர். ஷகிப் அல் ஹசன் 124 ரன்னும் லிடன் தாஸ் 94 ரன்னும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து வெற்றியை உறுதி செய்தனர். இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 189 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. 41.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த வங்கதேசம் 322 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Exit mobile version