உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 31-வது லீக் போட்டியில் ஷகிப் அல் ஹசனில் அபார ஆட்டத்தால் வங்கதேச அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தியது.
12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் 31-வது லீக் போட்டியில், மஷ்ரஃபி மோர்தஸா தலைமையிலான வங்கதேச கிரிக்கெட் அணி, குல்பாதீன் நையீப் தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டது. சவுதாம்ப்டனில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய வங்கதேச தொடக்க ஆட்டக்காரர்கள் கணிசமான ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அடுத்து களம் இறங்கிய ஷகிப் அல் ஹசன் நிதானமாக அடி 51 ரன்னும் தொடர்ந்து களம் இறங்கிய குஷ்ஃபிகுர் ரஹிம் 83 ரன்னும் குவித்து ஆட்டமிழந்தனர். 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த வங்கதேசம் 262 ரன்கள் எடுத்தது.
263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஃப்கானிஸ்தான் தொடக்க வீரர் ரஹமத் ஷா 24 ரன்களில் ஆட்டமிழக்க குல்பாதீன் நயீப் 47 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதன் பிறகு களம் இறங்கிய சமியுல்லா ஷின்வாரி நிலைத்து நின்று ஆடி 49 எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த நிலையில், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் 47 ஓவர்களுக்குள் அனைத்து விக்கெட்டையும் இழந்த ஆஃப்கானிஸ்தான் 200 ரன்கள் எடுத்தது. இதனால் வங்கதேசம் 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 வது இடத்திற்கு முன்னேறியது.
வெறும் 29 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷாகிப் அல் ஹசன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.