திருவள்ளூர் மாவட்டம் கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களுக்கு அர்ப்பணித்தார்.
சென்னை கலைவாரணர் அரங்கில், பல்வேறு உள் கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், பங்கேற்பதற்காக வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இசைக்கப்பட்டது.
பின்னர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவைத் தலைவர் தனபால், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர்.
விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொன்னாடை அணிவித்து, நினைவுப்பரிசாக விநாயகர் சிலையை வழங்கினார். தொடர்ந்து, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பொன்னாடை அணிவித்து, நினைவுப்பரிசாக நடராஜர் சிலையை வழங்கினார்.
முதலமைச்சர் தலைமையில் நடந்த விழாவில், 380 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட, திருவள்ளூர் மாவட்டம் கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்க திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அர்ப்பணித்தார்.
இதனைத் தொடர்ந்து, 61,843 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
1,620 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவை, அவிநாசி சாலையில் அமைக்கப்படவுள்ள உயர்மட்ட சாலைக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார்.
கரூர் மாவட்டம் நஞ்சை புகளூரில் 406 கோடி ரூபாய் மதிப்பீட்டில், காவிரி ஆற்றின் குறுக்கே கதவணைத் திட்டத்திற்கும் மத்திய அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து, சென்னை வர்த்தக மையத்தை 309 கோடி ரூபாயில் விரிவுபடுத்தும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய அவர், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் திட்டங்களான வல்லூரில் 900 கோடி ரூபாயில் பெட்ரோலிய முனையம், அமுல்லைவாயலில் 1, 400 கோடி ரூபாயில் லூப் பிளாண்ட் அமைத்தல் மற்றும் காமராஜர் துறைமுகத்தில் 900 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய இறங்குதளம் அமைக்கும் திட்டம் ஆகியவைக்கும் அடிக்கல் நாட்டினார்.
Discussion about this post