என் முகத்தில விளையாடிட்டீங்க: மருத்துவரிடம் 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்கும் ரைசா

தவறான முகப்பொலிவு சிகிச்சை அளித்ததற்காக ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி மருத்துவர் பைரவி செந்திலுக்கு நடிகை ரைசா வில்சன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ரைசா வில்சன் தரப்பு வழக்கறிஞர் ஜி. ஹரிஹர அருண் சோமசங்கர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், சென்னை நந்தம்பாக்கத்தில் வசித்துவரும் நடிகையும், மாடல் அழகியுமான ரைசா வில்சன், முகப்பொலிவு சிகிச்சைக்காக சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள பீஹென்ஸ்ட் என்ற சிகிச்சை மையத்தை அணுகியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அங்கிருந்த மருத்துவர் பைரவி செந்திலின் உத்தரவாதத்தின் அடிப்படையில் மார்ச் 25ஆம் தேதி மருத்துவர் வனிதா என்பவரும், மணி என்ற மற்றொரு நபர் ஆகியோர் மூலம் போடாக்ஸ் சிகிச்சையை ரைசா எடுத்துக்கொண்டு, அதற்கு கட்டணமாக 62 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்தியுள்ளைதை வழக்கறிஞர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பத்து நாட்களுக்கு பிறகும் எவ்வித முன்னேற்றமும் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்த ரைசா, மீண்டும் மருத்துவர் பைரவி செந்திலை அணுகியபோது, டெர்மா பில்லர்ஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக் கபட்டதாகவும், முதல் தடவையே ஏன் இந்த சிகிச்சை அளிக்கவில்லை என்றும், பணம் பறிப்பதுதான் நோக்கமா என்று ரைசா கேள்வி எழுப்பியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் ஏப்ரல் 16ஆம் தேதி ஆலோசனைக்கு பிறகு ஏப்ரல் 17ஆம் தேதியே டியர் ஃப்ரீ ஃபில்லர் சிகிச்சையை மருத்துவர் பைரவி செந்திலே அளித்ததுடன், அதற்காக 65 ஆயிரம் ரூபாய் கட்டணமாக செலுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சிகிச்சைக்கு பின்னர் ரைசாவின் வலது கண் மற்றும் கன்னத்திலிருந்து ரத்தக்கசிவு ஏற்பட்டதுடன், முகமும் வீங்கியதாகவும், இதற்கு மருத்துவர் பைரவி செந்தில் அளித்த தவறான சிகிச்சையே என ரைசா குற்றம்சாட்டி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ரைசா கேட்ட சிறிய அளவிலான சிகிச்சைக்கு மாறாக வலுக்கட்டாயமாக வேறு சிகிச்சை அளித்ததால்தான் தனது முகம் பாதிப்புக்கு உள்ளானதாக வேதனை தெரிவித்துள்ளார். மருத்துவர் பைரவியிடம் விளக்கம் பெற ரைசா முயன்றும், சந்திக்க மறுத்துவிட்டதாகவும் நோட்டீசில் சுட்டிக்காட்டியுள்ளார்.

15 நாட்களுக்குள் இழப்பீட்டுத் தொகையை கொடுக்காவிட்டால் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் மூலம் நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற வேண்டியிருக்கும் என மருத்துவர் பைரவி செந்திலை வழக்கறிஞர் ஜி.ஹரிஹர அருண் சோமசங்கர் அனுப்பிய நோட்டீசில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version