12-வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா வரும் 30 ஆம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. கோப்பையை வெல்ல இந்தியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. ரசிகர்களின் எதிர்பார்ப்புடன் தொடங்க உள்ள உலக கோப்பை கிரிக்கெட்டி போட்டியின் வரலாற்றை பார்த்து வருகிறோம். இன்று, 6-வது உலகக் கோப்பை பற்றி பார்க்கலாம்…
6-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 1996-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி முதல் மார்ச் 17-ந் தேதி வரை ஆசிய கண்டத்தை சேர்ந்த இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்தின. இலங்கை முதல் முறையாக இந்த உலக கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பு பெற்றது.
முந்தைய உலக கோப்பை போட்டியில் பங்கேற்ற 9 அணிகளுடன், கென்யா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை புதிய வரவாக கலந்து கொண்டன. உலக கோப்பை போட்டியில் 10-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டது இதுவே முதல்முறையாகும்.
போட்டியில் கலந்து கொண்ட 12 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டன. இலங்கை, ஆஸ்திரேலியா, இந்தியா, மேற்கிந்திய தீவுகள், ஜிம்பாப்வே, கென்யா அணிகள் ‘ஏ’ பிரிவிலும், தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து அணிகள் ‘பி’ பிரிவிலும் இடம் பெற்றன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணியுடன் தலா ஒரு முறை மோதின.
லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றன. இதில் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் கால்இறுதிக்குள் கால் பதித்தன.
எதிர்பார்த்தப்படி சிறிய அணிகள் வெளியேறின. ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் அணிகள் இலங்கையில் போதிய பாதுகாப்பு இல்லை என்று காரணம் காட்டி இலங்கை சென்று விளையாட மறுத்து விட்டன. இதனால் கொழும்பில் நடக்க இருந்த இரண்டு ஆட்டங்களிலும் இலங்கை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இலங்கை அணி சிரமமின்றி கால்இறுதி வாய்ப்பை உறுதி செய்தது.
கால்இறுதி ஆட்டங்களில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தையும், இந்திய அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும், மேற்கிந்திய தீவுகள் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவையும், ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தையும் தோற்கடித்து அரை இறுதிக்குள் நுழைந்தன.
இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான அரைஇறுதி ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் அரங்கேறியது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் தவிர மற்றவர்கள் வந்த வேகத்தில் ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். தோல்வியின் பாதையில் பயணித்த இந்திய அணி 34.1 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்து இருந்த போது ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் மைதானத்துக்குள் தூக்கி எறிந்தனர். கேலரியில் தீயும் வைத்தனர். கலவரத்தை கட்டுப்படுத்த எடுத்த முயற்சிக்கு உடனடியாக பலன் கிடைக்கவில்லை. போட்டி தொடர வாய்ப்பு இல்லாததால் இலங்கை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
மற்றொரு அரை இறுதியில் ஆஸ்திரேலிய அணி 5 ரன் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
பாகிஸ்தானில் உள்ள லாகூரில் நடந்த இறுதி யுத்தத்தில் அர்ஜூனா ரணதுங்கா தலைமையிலான இலங்கையும், மார்க் டெய்லர் தலைமையிலான ஆஸ்திரேலியாவும் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இலங்கை அணி 46.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக உலக கோப்பையை உச்சி முகர்ந்தது. அத்துடன் போட்டியை நடத்திய நாடு கோப்பையை வென்றதில்லை என்ற முந்தைய சரித்திரத்தையும் மாற்றியது. 107 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்த இலங்கை வீரர் அரவிந்த் டிசில்வா ஆட்ட நாயகன் விருது பெற்றார். இலங்கை வீரர் ஜெயசூர்யா தொடர் நாயகன் விருது பெற்றார்.