சமீபத்தில் செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் விஷச்சாராயம் குடித்து 23 பேர் பலியான நிலையில் இன்று டாஸ்மாக் அருகே உள்ள பாரில் மது வாங்கி குடித்த இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் கீழ அலங்கம் பகுதியில் டாஸ்மாக் பாரில் மதுவாங்கி குடித்த இரண்டு பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கீழ அலங்கம் பகுதியில் அரசு அனுமதி பெற்று டாஸ்மாக் மதுபானக் கடை இயங்கி வருகிறது. இந்த கடைக்கு எதிரே பார் இயங்கி வருகிறது. இந்த மதுபான பாரில், டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசல் பகுதியைச் சேர்ந்த குப்புசாமி (60) மற்றும் விவேக் (35) ஆகிய இருவரும் இன்று காலை 11.30 மணிக்கு டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே எதிரே உள்ள பாரில் பிளாக்கில் மதுபானம் வாங்கி குடித்துள்ளனர். இதில், குப்புசாமி மது குடித்துவிட்டு கடைக்கு வெளியே வந்ததும் வாயில் நுரைதள்ளி மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இதனிடையே, சிறிது நேரத்தில் அவருடன் பிளாக்கில் மது வாங்கி குடித்த விவேக் என்பவரும் மார்க்கெட் பகுதியில் மயங்கி விழுந்துள்ளார். அவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.
பிளாக்கில் மது வாங்கி குடித்து இருவர் உயிரிழந்த தகவல் காட்டுத் தீ போல பரவிய நிலையில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுவாக டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே இந்த மதுபான பாரில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
Discussion about this post