தமிழக சுற்றுலாத்துறை சார்பில் சென்னைத் தீவுத்திடலில் ஆண்டுதோறும் இந்தியச் சுற்றுலாப் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. 46-வது ஆண்டு சுற்றுலாப் பொருட்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார்.
பொருட்காட்சி தொடக்க விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், வெல்லமண்டி நடராஜன், தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள் தமிழகத்தில் உள்ளதாகவும், இதனால் நாட்டிலேயே சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுற்றுலாப் பயணிகள் வருகையில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார். இதேபோல், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறுகையில், சுற்றுலாத்துறை வளர்ச்சிக்காகத் தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும், சுற்றுலாத்துறையால் அதிக வருவாய் ஈட்டப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, பொருட்காட்சியைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் அரசின் பல்வேறு துறைகளின் அரங்குகளைத் திறந்து வைத்துப் பார்வையிட்டார். சுகாதாரத்துறை அரங்கில் தனது உடல்நலம் குறித்துப் பரிசோதனை செய்துகொண்டார். அதன்பின் ஒவ்வொரு துறையிலும் அதன் செயல்பாடுகள், சாதனைகள் குறித்த விளக்கப்படங்களையும் பார்வையிட்டார்.
Discussion about this post