வடகிழக்குப் பருவமழை தொடங்கிக் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், தற்போது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது. அப்போது, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதுடன், தயார் நிலையில் இருக்குமாறு, துறைசார்ந்த அதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதலமைச்சர் உத்தரவிட்டார்.
அதன்படி, மழைக் காலங்களில் கீழே விழும் மரங்களை உடனே அகற்றத் தேவையான கருவிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மழைநீர் தேங்கும் இடங்களில் நீரை வெளியேற்ற மின்மோட்டார்கள் தயார் நிலையில் வைக்குமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
மேலும் மழைக்காலங்களில் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவு மருந்துகள் இருப்பில் வைக்கவும், நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை இருப்பில் வைக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மழைக்காலங்களில் உயிர்ச் சேதம் மற்றும் பொருட் சேதம் ஏற்படாமல் இருக்க அனைத்து துறைசார்ந்த அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில், பாதிப்பிற்குள்ளாகக் கூடிய இடங்களில் தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் இருக்குமாறு முதலமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார்.
Discussion about this post