தாமிரபரணி – நம்பியாறு – கருமேனியாறு இணைப்புத் திட்டப் பணிகள் 2020 டிசம்பருக்குள் முழுமையாக நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னீர்பள்ளத்தில் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், தாமிரபரணி – நம்பியாறு – கருமேனியாறு இணைப்புத் திட்டத்தை அதிமுக அரசு கிடப்பில் போட்டுள்ளதாக ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்வதாகக் குற்றம் சாட்டினார். நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், 2 பிரிவுகளில் 95 சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளதாகவும் கூறினார். மேலும், 4 பிரிவுகளின் மொத்தப் பணிகளும் 2020 டிசம்பருக்குள் முழுமையாக நிறைவுபெறும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியை வீட்டுச்சிறையில் வைத்தவர்தான் ஸ்டாலின் எனவும் குற்றம் சாட்டினார்.
இதைத்தொடர்ந்து, கிருஷ்ணாபுரம் தொகுதியில் பிரசாரம் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்தியாவிலேயே தமிழகம்தான் சட்டம் ஒழுங்கில் சிறந்து விளங்குகிறது என பெருமிதம் தெரிவித்தார். சட்டம், ஒழுங்கு சிறப்பாக இருப்பதால் தான், பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் பேச்சுவார்த்தைக்கு தமிழகம் தேர்வு செய்யப்பட்டது எனவும் கூறினார்.
நாட்டு மக்களுக்கு துரோகம் விளைவிக்கும் கட்சி திமுக என சாடிய முதலமைச்சர், வாக்களித்த மக்களை வசந்தகுமார் மதிக்கவில்லை என்றும், அவருக்கு தேர்தலின் மூலம் பாடம் புகட்ட வேண்டும் என்றார்.
பின்னர், கே.டி.சி நகரில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக, தமிழக அரசு எப்போதும் செயல்படும் என தெரிவித்தார். மத்திய அரசுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாகவும், அரசு ஊழியர்களை போராட ஸ்டாலின் தூண்டி விடுகிறார் என்றும் தெரிவித்தார்.
சீவலப்பேரி பகுதியில் வாக்குசேகரித்த முதலமைச்சர் பழனிசாமி, நீட் தேர்வுக்கு காரணமே திமுக – காங்கிரஸ் கூட்டணிதான் என்றார். நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு தொடர்ந்து போராடி வருவதாகவும் அவர் தெரிவித்தார். திமுக கட்சி இல்லை என்றும் கார்ப்பரேட் கம்பெனி என்றும் முதலமைச்சர் விமர்சித்தார். தேர்தல் வந்தால்தான் ஸ்டாலினுக்கு திண்ணை நியாபகத்திற்கு வரும் என்றும், பொதுமக்களிடம் இருந்து பெற்ற மனுக்களை ஸ்டாலின் என்ன செய்தார் என்றும் கேள்வி எழுப்பினார்.
Discussion about this post