தமிழகத்தில் போராட்டம் நடத்திய ஆசிரியர்களில் 99 சதவிகிதம் பேர் பணிக்கு திரும்பியுள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர், ஒரு வாரத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தினர். பள்ளித் தேர்வுகள் நடக்க இருப்பதால் ஆசிரியர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கை வந்தது. போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகள் என்றும் புறந்தள்ளியதில்லை என தெரிவித்தார். அரசின் வேண்டுகோளை ஏற்று ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு வருகின்றனர். நேற்று 97 சதவிகிதம் பேர் பணிக்கு திரும்பிய நிலையில், இன்று 99 சதவிகிதமாக வருகை அதிகரித்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகை 99 சதவிகிதம் உள்ளதாக குறிப்பிட்டிருக்கிறது. ஆயிரத்து 584 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பணிக்கு திரும்பாத ஆசிரியர்களுக்கு இனி அவகாசம் வழங்கப்பட மாட்டாது என்றும் கூறியுள்ளது.