தேர்தல் பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தத் தடை கோரி வழக்கு

தேர்தல் பணிகளில் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்தத் தடை கோரி மனுவுக்கு 2 வாரத்தில் பதிலளிக்க, மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவாரூர் மாவட்ட நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் சிவபாக்கியம் உள்ளிட்ட இருவர் தாக்கல் செய்த மனுவில், நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களை ஓட்டுச்சாவடி அதிகாரிகளாக நியமித்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் செய்யும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

ஒரு ஆசிரியர் ஆயிரம் வீடுகளில் வாக்காளர் பட்டியலை சரி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் ஆசிரியர்கள் பணி பாதிப்புக்குள்ளாவதாகவும், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மேலும்,

நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே இந்தப் பணிக்காக பயன்படுத்தப்படுகின்றனர் என்றும், உயர் நிலைப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை இப்பணிகளுக்கு நியமிக்கப்படுவதில்லை என்றும் மனுவில் தெரிவித்திருந்தனர். இப்பணிகளுக்குத் தனி துறையை உருவாக்கி, வாக்காளர் பட்டியல் சரி செய்யும் பணியை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார்.

Exit mobile version