திருவள்ளூர் மாவட்டத்தில் பருவமழை பாதிப்புக்களை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் மகேஷ்வரி ரவிக்குமார் கூறியதாவது:-
வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளது. இதனால் மாவட்டத்தில் ஏற்படும் பாதிப்புகளையும், அசம்பாவிதங்களையும் தடுக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 8 வட்டங்கள், 48 பிர்க்காவில் உள்ள ஒவ்வொரு வார்டு வாரியாகவும், கிராமங்களிலும் வெள்ளப் பாதிப்புகள் ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் அதிக பாதிப்புகள் ஏற்படும் பகுதியாக 39 பகுதிகளும் மிதமான பாதிப்பு ஏற்படும் 8 இடங்களும் கண்டறியப்பட்டுள்ளன.
பேரிடர் தாக்குதலுக்குள்ளாகும் பகுதிகளின் விவரங்கள், பேரிடர் பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றுவதற்கான வழிமுறைகள், போக்குவரத்து தடங்கள், மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான இடங்கள் போன்றவை தயார் நிலையில் உள்ளன. மண்டல, வட்டார அளவில் 64 குழுக்களும், மாவட்ட அளவில் பேரிடர் மீட்புப் படையினர் பொன்னேரியில் 42 குழுக்களும், கும்மிடிப்பூண்டி பகுதியில் 22 குழுக்களும், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 5 குழுக்களும் எப்போதும் தயார் நிலையில் இருப்பார்கள்.
உடைப்புகளை தடுக்கும் வகையில் மணல் மூட்டைகள் தயாராக உள்ளன. பொக்லைன் இயந்திரங்கள், மரம் அறுக்கும் கருவி, தண்ணீர் உறிஞ்சும் இயந்திரங்கள், குடிநீர் லாரிகள், ஜெனரேட்டர், கொசு மருந்து புகை தெளிப்பான், பிளீச்சிங் பவுடர், குளோரின், மின்கம்பங்கள், மின் மாற்றிகள், தற்காலிக தங்கும் வளாகங்கள் ஆகியவையும் தயார்நிலையில் உள்ளன. மழைக்காலத் தொற்று நோய்களைக் கண்காணிக்கும் வகையில் 42 மருத்துவக் குழுக்களும் தயாராக உள்ளன.
உணவுப் பொருள் வழங்கல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கூட்டுறவு சங்கங்கள் ஆகிய துறைகள் மூலம் அத்தியாவசிய உணவுப் பொருள்களான அரிசி, கோதுமை மற்றும் மண்ணெய் ஆகியவை 3 மாதங்களுக்கு தேவையான அளவுக்கு இருப்பு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரச் சீர்கேடுகளை சமாளிக்க மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்துகள் கூடுதலாக இருப்பில் உள்ளது. பெருமழையால் பாதிக்கப்படுவோரை பாதுகாக்க 108 ஆம்புலன்ஸ் மற்றும் வேன்களும் தயாராக இருக்கிறது. எனவே, பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்.” இவ்வாறு ஆட்சியர் கூறினார்.