தருமபுரி அருகே உள்ள நத்தம் பகுதியை சேர்ந்தவர் இளவரசன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த திவ்யா என்பவருக்கும் கடந்த 2012ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்றது. இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால், திவ்யாவின் பெற்றோர் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி, தர்மபுரி அரசு கலைக் கல்லூரிக்குப் பின்னால் உள்ள தண்டவாளத்தில் இளவரசன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து, இளவரசனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அப்போது, முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்தார். 2 மாதங்களுக்குள், விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்ட நிலையில், காலக்கெடு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. கடந்த ஜூலை 5-ம் தேதி கடைசியாக அரசாணை வெளியிடப்பட்டது. இந்தநிலையில், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த நீதிபதி சிங்காரவேலு இளவரசன் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார்.
Discussion about this post