தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு!

தந்தை பெரியாரின் 140வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு அவரது சித்தாந்தங்களை பற்றியும், அவரின் ஆளுமையைப் பற்றியும், அவரின் வாழ்க்கை வரலாறு பற்றியும் தற்போது பார்க்கலாம்.

“புத்துலக தொலைநோக்காளர்; தென்கிழக்காசியாவின் சாக்ரடிஸ்; சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி” என்று யுனஸ்கோ நிறுவனத்தால் பாராட்டப்பட்ட பெரியார் பிறந்த தினம் இன்று.

இன்றளவில் சாதி வேற்றுமையும், மூடநம்பிக்கையும் முடங்கிப்போக வைத்தவர் பட்டியலில் முதன்மை இடம் இவருக்கே. சின்னத்தாயம்மை – வெங்கட்ட நாயக்கர் தம்பதியருக்கு செப்டம்பர் 17, 1879ல், ஈ.வே.இராமசாமி நாயக்கர் பிறந்தார். சாதி வேற்றுமையை கலைந்தெரிய முற்படும்போது தனது பெயரில் உள்ள நாயக்கர் என்ற சொல்லை எடுத்துவிட்டு பெரியார் என்ற சொல்லை இணைத்து, அனைவருக்கும் முன்னுதாரணமாக விளங்கினார்.

மக்களுக்காகக் குரல் கொடுத்த சிறந்த சமூக சீர்திருத்தவாதி. மிகப்பெரிய பகுத்தறிவாளர். திராவிடர் கழகத்தை தோற்றுவித்தவர். ” கற்பனைகள் எல்லாம் எப்போது கடவுள் ஆனதோ, அன்றே மனிதன் எல்லாம் முட்டாள் ஆகிவிட்டான்” என்று தனது கருத்தை ஆணித்தரமாகப் பதிவு செய்து, இறுதிவரை மாறாமல் இருந்தவர்.

தென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ் என்றும், பகுத்தறிவு சிற்பி என்றும் அழைக்கப்படும் இவர், காந்தியடிகளின் கொள்கையை பின்பற்றியவர். கேரளாவில் வைக்கம் எனும் ஊரில் தலித் மக்களுக்காகப் போராடி வெற்றி பெற்ற காரணத்தால் ‘வைக்கம் வீரர்’ என்றும் அழைக்கப்பட்டார். ‘திராவிடநாடு’ அல்லது ‘தனி தமிழ்நாடு’ என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.

“யார் சொல்லியிருந்தாலும், எங்குப் படித்திருந்தாலும், நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே” என்று முழங்கிய அறிவுத் திறவுகோல் பெரியார்.

எதையும் ‘ஏன்? எதற்கு? எப்படி?’ என்று கேட்கவைத்த பகுத்தறிவுப் பகலவன், 1973 டிசம்பர் 19 ஆம் தேதி சென்னை தியாகராஜர் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் ‘சாதிமுறையையும், இழிவுநிலையையும் ஒழித்துக்கட்டத் திராவிடர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடவேண்டும்’ என்று முழக்கமிட்டு தன்னுடைய கடைசி உரையை முடித்துக்கொண்டு, டிசம்பர் 24, 1973 ஆம் ஆண்டு தனது 94 வது வயதில் காலமானார்.

 

Exit mobile version