பகுத்து அறிபவர் அனைவரும் பெரியார்! பகுத்தறிவு பகலவன் “தந்தை பெரியார்” குறித்து ஒரு சிறப்புப் பார்வை!

தொண்டு செய்து பழுத்த பழம் என பாவேந்தர் பாரதிதாசனால் புகழப்பெற்ற பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாருக்கு இன்று பிறந்தநாள்… செல்வந்தர் வீட்டு வாரிசாய் பிறந்தவர் சமூக சீர்த்திருத்தவாதியாய் மாறியது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்…

ரெட்டி, ஷர்மா, வர்மா, யாதவ் என வடமாநிலங்களில் சாதிப் பெயரை பெயருக்குப் பின்னால் இட்டுக்கொள்ளும் வழக்கம் தமிழகத்தில் இல்லாதது கண்டு பலர் அதிசயித்தது உண்டு. படிப்பறிவு மிகுந்த மாநிலமாக கருதப்படும் கேரளத்தில் கூட மேனன்களும், நாயர்களும் பெயர்களுக்கு பின்னால் தொற்றிக் கொண்டு தான் இருக்கிறது இன்னும். ஆனால், தமிழகத்தில் ஏன் இந்த வழக்கம் இல்லை என கேட்பவர்களுக்கு கிடைக்கும் ஒரே பதில் பெரியார் மட்டுமே… யார் இந்த பெரியார்… சிந்திப்பிலும், அறிவாற்றலிலும் தமிழகம் மற்ற மாநிலங்களை விட முன்னோடியாய் இருப்பதற்கு பெரியாரின் பங்கு என்ன… வாருங்கள் பார்க்கலாம்…

1879ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி வெங்கட்ட நாயக்கர், சின்னத்தாயம்மை தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் தான் ஈ.வெ. ராமசாமி அவர்கள். அண்ணன் கிருஷ்ணசாமி மற்றும் பொன்னுத்தாயம்மாள், கண்ணம்மாள் என்ற இரு இளைய சகோதரிகளையும் கொண்ட வசதியான, வணிகக் குடும்பம் பெரியாரின் குடும்பம். பள்ளி வாழ்க்கை முதல் ஐந்து ஆண்டுகளிலேயே முடிந்துபோய்விட்டது. தந்தையின் மளிகைக் கடையில் வேலைக்கு வந்துவிட்டார். விரும்பியபடி நாகம்மையைத் திருமணம் செய்து கொண்டார். தம்பதிகளுக்குப் பிறந்த பெண் குழந்தை ஐந்து மாதத்தில் இறந்துவிட்டது. அதன் பிறகு குழந்தைகள் இல்லை.

தனது பெண் குழந்தை இறந்த சில நாட்களில், ஏதோ சோகம் அவரது மனதை வாட்டியது. யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல், சில தங்க நகைகளை மட்டும் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி காசிக்குச் சென்றார் ஈ.வெ. ராமசாமி நாயக்கர். கையிலிருந்த பணம் காலியானது. ராமசாமி நாயக்கருடன் சென்ற இருவரும் பிரிந்து சென்றுவிட்டார்கள். நாயக்கருக்கு பசியோ பசி. அங்கிருந்த சத்திரத்துக்குச் சென்று உணவு கேட்டார். ஆனால், அங்கே பிராமணர்களுக்கு மட்டுமே உணவு என்று சொல்லி, விரட்டிவிட்டார்கள்.

பசிக்கொடுமை தாங்காமல், அந்தச் சத்திரத்துக்கு வெளியே கிடந்த இலைகளில் மிஞ்சிய உணவை எடுத்துச் சாப்பிட்டார் செல்வந்தரான ராமசாமி நாயக்கர். அப்போது கண்ணீரோடு அந்த சத்திரத்தை நோக்கிய போது, தமிழ்நாட்டைச் சேர்ந்த பிராமணரல்லாத ஒருவரால் அந்தச் சத்திரம் கட்டித் தரப்பட்டுள்ளது என்ற பெயர்ப் பலகையை அவர் படித்தார். சத்திரம் கட்டியவர் ஒருவர், சாப்பிடுபவர்கள் ஒரு குலத்தார் மட்டுமே என்பதைப் புரிந்து கொண்டு, சிந்திக்க ஆரம்பித்தார். அந்த சம்பவம் தான் ராமசாமி நாயக்கரை, பகுத்தறிவு பகலவன் பெரியாராய் மாற்றியது.

ஊருக்குத் திரும்பியதும் மக்கள் சேவையில் தனது கவனத்தைச் செலுத்தினார். சடங்குகள், சம்பிரதாயங்கள் என அனைத்தையும் கேள்வி கேட்டார். மக்கள் விசித்திரமாய் பார்த்தனர் பெரியாரை. இவருக்கு தலையில் ஏதோ கோளாறு போல என அவர் காதுபடவே பேசினர். ஆனால், தங்கள் தலையெழுத்தை மாற்ற வந்த தேவதூதன் அவர் என்பது அப்போது அவர்களுக்குத் தெரியவில்லை. பிளேக் நோய் உருவாகிப் பலரும் மடிந்த சமயத்தில், ஓடோடி உதவினார். பல இறந்த உடல்களைச் சுமந்து சென்று இறுதிக்கடன் செய்தார். இவ்வாறு மக்கள் மத்தியில் செல்வாக்கும், நற்பெயரும் பெற்றதால் ஈரோடு நகர சபைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

மூட நம்பிக்கை, சாதி ஒழிப்பு, கடவுள் மறுப்பு என தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் பேசி, கல்லடி, செருப்பு மாலை என பிற்போக்காளர்களால் பல அவமானங்களையும் சந்தித்துள்ளார். அதே சமயம் மாற்று கொள்கைகளை கொண்டவர்களையும் மதிக்கும் பழக்கத்தை கொண்டவர் பெரியார் என்பதற்கு, குன்றக்குடி அடிகளார், மறைமலை அடிகள், ராஜாஜி போன்றவர்கள் மிக நெருக்கமான நண்பர்களாக இருந்ததே சான்று. பெரியாரின் மற்றொறு முக்கியமான கொள்கை பெண் விடுதலை. பெண்ணுக்கு சுதந்திரம் வேண்டும் என்ற வழக்கமான ஆண்களின் பார்வையில் இல்லாமல், பெண்கள் ஏன் அடிமைப்படுத்தப்படுகிறார்கள் என பெரியார் எழுதிய பெண் ஏன் அடிமையானாள் என்ற புத்தகமே அவரது கொள்கை வீரியத்திற்கு சான்றாக இன்றும் விளங்கி வருகிறது.

மொழி, இனம், மதம் என எதன் மீதும் தனக்கு பற்று இல்லை என கூறிய பெரியார்தான், தமிழகத்தில் நடந்த முதல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை முன்னின்று நடத்திய தலைவர்களில் ஒருவர். இந்தியை தொடர்ந்து எதிர்த்து வந்த பெரியார், இந்திக்கு மாற்றாக ஆங்கிலத்தை அனைவரும் கற்க வேண்டும் என 1940களிலேயே கோரிக்கை வைத்தவர். அரசியலில் ப.ஜீவானந்தம் முதல் அண்ணா வரை எத்தனையோ பேர் தன்னை விட்டு பிரிந்து போனாலும் தனக்கு சரியென தோன்றுவதை மட்டுமே செய்வேன் என்பதில் பிடிவாதமாக இருந்தவர் பெரியார்.

பின்பு அண்ணாவுடனான கருத்து வேறுபாடு நீங்கிய பிறகு திமுகவை ஆதரித்த பெரியார், கருணாநிதி ஆட்சிக்காலத்திலும் தொடர்ந்து மூடநம்பிக்கைகளை எதிர்த்து பல போராட்டங்களை மேற்கொண்டார். தனது இறுதி மூச்சு வரை, தள்ளாத வயதிலும் மூத்திரச் சட்டியைத் தூக்கிக் கொண்டு ஊர் ஊராய் அலைந்து திரிந்து அடித்தட்டு மக்களின் வாழ்க்கை மேம்பட, சாதி, மத அடையாளங்களைத் துறந்து மனிதனாய் மாற, பெண்கள் தலைநிமிர, சாதி ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் மலர போராடியவர் பெரியார்.

“நான் சொல்கிறேன் என எதையும் நம்பாதீர்கள். உங்கள் அறிவு என்ன சொல்கிறதோ அதை நம்புங்கள். நான் சொன்னதைக் கேட்ட பிறகு, உங்கள் அறிவுக்குச் சரி என்று பட்டால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள் இல்லை என்றால் கைவிட்டு விடுங்கள்” என பகுத்தறிவின் முக்கியத்துவத்தை இறுதி மூச்சின்போது கூட வலியுறுத்தியவர் அறிவாசான் தந்தை பெரியார்.

சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக ஒலிக்கும் கடைசி குரல் இருக்கும் வரை பெரியாரும் இருப்பார் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை…

Exit mobile version