தந்தை பெரியாரின் 48வது நினைவு தினம்-அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் மரியாதை

திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், சமூக ஏற்றத் தாழ்வுக்கு எதிராக போராடியவருமான பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் நினைவு நாளில் அவரது சமூக சீர்த்திருத்த செயல்பாடுகளை அண்ணா திமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நினைவு கூர்ந்துள்ளார்.

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 48வது நினைவு தினம், இன்று தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, தந்தை பெரியாரின் உருவச் சிலை மற்றும் உருவப் படத்திற்கு அண்ணா திமுக நிர்வாகிகள், பெரியாரிய இயக்கங்கள் உள்பட பல்வேறு தரப்பினர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

மேலும், அவரது நினைவு தினத்தை முன்னிட்டு, பல்வேறு கருத்து உரையாடல் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. அடக்குமுறைக்கும், அதிகாரத்திற்கு எதிராகவும், தமிழ், தமிழர் உரிமைகளுக்காகவும் இறுதி மூச்சுவரை தந்தை பெரியார் நடத்திய போராட்டங்களும், ஆற்றிய பணிகளும் ஏராளம்.

அந்த வகையில், அவரது நினைவு நாளில், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகளும் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன.தந்தை பெரியாரின் நினைவு நாளில், அண்ணா திமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தியுள்ளார்.

அவர் விடுத்துள்ள செய்தியில், திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், சமூக ஏற்றத் தாழ்வுக்கு எதிராக போராடியவரும், பெண்ணுரிமையின் முக்கியத்துவம் வற்புறுத்திய பெண்ணியவாதியுமான பகுத்தறிவு பகலவன், தந்தை பெரியாரின் நினைவு நாளில், அவரின் சமூக சீர்த்திருத்த செயல்பாடுகளை நினைவுகூர்வதாக கூறியுள்ளார்.

Exit mobile version