வருகிற கல்வி ஆண்டு முதல் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான செப்டம்பர் மாத துணைத்தேர்வு முறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு முதல் மார்ச், ஏப்ரல் மாதம் நடைபெறும் பொதுத்தேர்வில் தோல்வி அடையும் பள்ளி மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதுவதற்காக ஜூன், ஜூலை மாதங்களில் உடனடி சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி தேர்வு எழுதி தேர்ச்சி பெறும் மாணவர்கள், தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேர்ந்து வருகின்றனர். இந்நிலையில், அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், செப்டம்பர் மாதம் நடைபெறும் துணைத்தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
இதனால், செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டு வரும் பொது தேர்வினை வரும் கல்வியாண்டு 2019-2020 முதல் ரத்து செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கடந்த 66 வருடங்களாக நடைமுறையில் இருந்து வந்த துணைத்தேர்வு முறை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.