"பாடத்திட்டங்களை குறைத்து பொதுத்தேர்வை மே மாதத்தில் நடத்த வலியுறுத்தல்"

கொரோனா மற்றும் பருவமழை பாதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, பள்ளிக்கல்வி பாடத்திட்டங்களை குறைத்து, பொதுத்தேர்வை மே மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என்று, அரசுக்கு, அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,வடகிழக்கு பருவமழை துவங்கியதிலிருந்தே, மாணவ, மாணவிகள் தொடர்ச்சியாக பள்ளிகளுக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இன்னும் எஞ்சியுள்ள காலத்தில், குறைக்கப்பட்ட பாடத் திட்டங்களைக் கூட முடிக்க முடியாத சூழல்நிலையில், முழு பாடத்திட்டத்தையும் படிக்க வேண்டிய சூழ்நிலை மாணவ, மாணவிகளுக்கு ஏற்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், பாடத் திட்டங்கள் குறைக்கப்படாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருப்பது, மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்க வழிவகுப்பதாக தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்வுக்கு தயாராவதற்கு குறைந்தபட்சம் 6 மாதங்கள் தேவைப்படும் என்பதை கருத்தில் கொண்டு, பாடத்திட்டங்களை குறைத்து, பொதுத்தேர்வை மே மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என அவர் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

 

Exit mobile version