நாளை யு.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வு – கட்டுப்பாடுகள் என்னென்ன?

சிவில் சர்வீசஸ் முதல் நிலைத் தேர்வு நாடு முழுவதும் நாளை நடைபெறுகிறது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ( UPSC ) நடத்தும் சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு ( Prelims ) நாடு முழுவதும் நாளை நடைபெறுகிறது.  72 நகரங்களில், 2569 மையங்களில் நடைபெறும் தேர்வை 10.58 லட்சம் பேர் எழுத உள்ளனர். தேர்வு மையங்களைத் தங்கள் விருப்பத்துக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம் என்று UPSC முன்னர் அறிவித்திருந்த நிலையில், 60,000 தேர்வர்கள் தங்கள் தேர்வு மையங்களை விருப்பத்துக்கேற்ப மாற்றியிருப்பதாக UPSC தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் அச்சத்துக்கிடையே நடைபெறும் தேர்வு நாளை காலை 9.30 மணி மற்றும் பகல் 2.30 மணி என்று இரு கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்வுக்காக பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ள UPSC, தேர்வர்கள் அவற்றைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

முகக்கவசம் அணிந்து, ஹால் டிக்கெட்டுடன் வரும் தேர்வர்கள் மட்டுமே தேர்வு மையத்துக்குள்ளாக அனுமதிக்கப்படுவர் என்றும், தேர்வு தொடங்குவதற்கு 10 நிமிடம் முன்பு வரை மட்டுமே தேர்வு மையத்துக்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்படுவர் என்றும் UPSC தெரிவித்துள்ளது.

OMR Sheet முறையில் நடைபெறும் தேர்வை எழுத கறுப்பு நிற பேனாவை தேர்வர்கள் எடுத்து வர வேண்டும் என்றும், வெளிப்படையான பாட்டிலில் சானிடைசரை எடுத்துவர வேண்டும் என்றும் UPSC தெரிவித்துள்ளது. தனி மனித இடைவெளி கட்டாயம், வெப்பநிலை பரிசோதனை கட்டாயம், அடையாள அட்டை கட்டாயம் போன்ற அறிவுறுத்தல்களையும் UPSC வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version