பேரிடர் பயிற்சியின் போது உயிரிழந்த கோவை கல்லூரி மாணவியின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கோவை அருகே தனியார் கல்லூரி வளாகத்தில் பேரிடர் காலங்களில் எவ்வாறு தப்பிக்க வேண்டும் என்பது குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் பி.பி.ஏ இரண்டாம் ஆண்டு மாணவி லோகேஸ்வரி என்பவரும் பயிற்சியில் கலந்துகொண்டார். அப்போது கட்டடத்தின் 2வது மாடியில் இருந்த குதித்தபோது முதல் மாடியின் சுவர் பகுதியில் மோதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இந்தநிலையில், உரிய அனுமதி பெறாமல் முறையற்ற பயிற்சி அளித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உயிரிழந்த கல்லூரி மாணவியின் குடும்பத்திற்கு பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்ச ரூபாய் நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
மாணவி இறந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.