தமிழக அரசின் முயற்சியால் புத்துயிர் பெற்று வரும் பறவைகள் சரணாலயம்

 

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பகுதியில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் நான்கரை கிலோ மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ளது வெள்ளோடு பறவைகள் சரணாலயம்.

இந்த சரணாலயத்தில் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பறவைகளுக்கான சீசன் தொடங்கும். இந்த காலத்தில் உள்நாட்டு பறவைகள் மட்டுமின்றி சைபீரியா, நியூசிலாந்து, ரஷியா, ஆஸ்திரேலியா என பல்வேறு நாடுகளின் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு வருகின்றன.

இந்த பறவைகள் சரணாலயத்திற்கு வரும் பொதுமக்கள், செம் பருந்து, வால் காக்கை, பூ நாரை, பஞ்சுருட்டாண், வண்ண நாரை, காஸ்பியன் ஆலா, வெண் புருவ சின்னான்,வெள்ளை ஆலா, கருங்கழுத்து நாரை, மீன் கொத்தி, சிறிய பச்சை பஞ்சுருட்டான், மரங் கொத்தி, ஆலா, மாங்குயில் உள்ளிட்ட பறவைகளை கண்டு ரசித்து செல்வது வழக்கம்.

இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக சரணாலயத்துக்கு அருகே உள்ள ஏரி வறண்டு போனது. இதன்காரணமாக பறவைகளின் வருகை குறைந்ததாக தெரிகிறது. இந்நிலையில், ஏரியின் புனரமைப்பு பணிகளுக்காக தமிழக அரசு சுமார் 2 கோடியே 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, பணிகளை துவக்கியது. இதனிடையே பவானிசாகர் அணை நிரம்பியதால், அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் தற்போது பறவைகள் சரணாயலம் அருகே உள்ள ஏரி கடல் போல் காட்சியளிக்கிறது.

இந்தநிலையில் ஏரியை ஆழப்படுத்துவது, ஏரியை சுற்றி புதியதாக கரைகள் அமைப்பது, பழைய கரைகளை புனரமைப்பு செய்து கரைகளை உயரப்படுத்துவது மற்றும் பறவைகள் வந்து ஓய்வு எடுக்கும் வகையில் புதியதாக கருங்கற்களை கொண்டு ஏரியின் நடுவில் மரங்களை நட்டு மணல் மேடுகள் ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகள் முடிவடைந்தவுடன் பறவைகள் சரணாலயத்தின் ஏரியில் படகுகள் இல்லம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும், அனைத்து பணிகளும் நிறைவடைந்தவுடன் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் புதிய சுற்றுலாத்தலமாக விளங்கும் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசின் இந்த முயற்சி விவசாயிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை எற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு வழக்கம் போல் பறவைகள் வெள்ளோடு சரணாலயத்துக்கு வந்து சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்து படைக்கும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Exit mobile version