உலக கோப்பை 2019: ஆஸி. அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது

உலக கோப்பை 17-வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

இங்கிலாந்தின் டான்டன் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக ஆரோன் ஃபிஞ்ச், டேவிட் வார்னர் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் தொடக்க முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்பட 82 ரன்கள் விளாசிய ஆரோன் ஃபிஞ்ச், 23-ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி146 ரன்களை குவித்தது.

அடுத்து களம் கண்ட ஸ்மித் 10 ரன்களில் வெளியேர, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய வார்னர் சதம் அடித்தார். ஸ்மித்தை தொடர்ந்து மேக்ஸ்வெல் 20 ரன்களுக்கு வெளியேரினார். 111 பந்துகளை சந்தித்த வார்னர், 11 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 107 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 49 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட் இழந்த ஆஸ்திரேலியா 307 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் முகமது ஆமிர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

308 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடத் தொடங்கிய பாகிஸ்தான் அணியில், இமாம் உல் ஹக் 7 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முகமது ஹஃபீஸ் 46, வஹாப் ரியாஸ் 45, கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது 40 ரன்கள் எடுத்தனர். இதர விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் வீழ்ந்தன. இதனால், 45.4 ஓவர்களில் 266 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது. இதனால் 41 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக டேவிட் வார்னர் தேர்வு செய்யப்பட்டார்.

Exit mobile version