பள்ளிக்கரணையில் பெண் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக, கணவரே மனைவியை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கணவர் பாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஜனவரி 21ம் தேதி, பள்ளிக்கரணையில், குப்பை கிடங்கினுள், பெண் ஒருவரின் இரண்டு கால்கள், ஒரு கை துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. கை மற்றும் கால்களை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பள்ளிக்கரணை போலீசார், இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், கைப்பற்றப்பட்ட உடல் உறுப்புகள், தூத்துக்குடியைச் சேர்ந்த சந்தியாவுக்கு சொந்தமானது என்பதும், குடும்ப தகராறில் அவரது கணவர் பாலகிருஷ்ணனே துண்டு துண்டாக வெட்டி குப்பை தொட்டியில் வீசியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. சந்தியாவின் சொந்த ஊர், இலங்கையின் நாகர்கோயில் என்று கூறப்படுகிறது. திருமணத்துக்கு பிறகு கணவரின் ஊரான தூத்துக்குடியில் அவர் வசித்து வந்துள்ளார். பாலகிருஷ்ணன் – சந்தியா தம்பதியினருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். உள்ளாட்சித் தேர்தலிலும் சந்தியா போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளதாக கூறபடுகிறது. இதேபோல், பாமக முன்னாள் மாவட்ட தலைவராக இருந்துள்ள பாலகிருஷ்ணன், திரைப்பட ஆசை காரணமாக சென்னை வந்து, ஜாபர்கான் பேட்டையில் வீடு எடுத்து தங்கியிருந்தார். சொந்தமாக படம் எடுத்த பாலகிருஷ்ண்ன் நஷ்டமடைந்துள்ளார்.
இதற்கிடையே, சந்தியாவுக்கு பிற ஆண்களுடன் தொடர்பு இருந்ததாகவும், இதனால் கணவன் மனைவி இடையே அவ்வப்போது சண்டை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பாக விவகாரத்து கோரி சந்தியா விண்ணப்பித்துள்ளார். பொங்கல் பண்டிகையின், போது சந்தியா சென்னை வந்த நிலையில்தான், பாலகிருஷ்ணன் சந்தியாவை கொலை செய்துள்ளார். பின்னர், தூத்துக்குடிக்கு சென்ற பாலகிருஷ்ணன், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக, வழக்கத்துக்கு மாறாக எப்போதும் சோர்வாகவே இருந்து வந்ததாக உறவினர்கள் கூறுகின்றனர். இந்த கொலை தொடர்பாக பாலகிருஷ்ணனை கைது செய்து போலீசார், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.