வரதட்சணைக்காக அடித்துக் கொலை செய்யப்பட்ட பெண், தேனியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய சம்பவம்!

தேனியில் குடும்பத்துடன் சேர்ந்து மனைவியை கொலை செய்து சடலத்தை ஆற்றில் வீசி விட்டு, ஒன்றரை ஆண்டுகளாக காணவில்லை என நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்தனர்.

 

தேனி வனச்சாலை பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் ராணுவ வீரராக பணியாற்றியுள்ளார்.

இவருக்கும் கிரிஜா பாண்டி என்பவருக்கு 2018ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.

திருமணம் ஆன நாள் முதல் ஈஸ்வரனும் அவரது குடும்பத்தாரும் கிரிஜா பாண்டியனை வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியுள்ளனர்.

இது குறித்து ஈஸ்வரன் மீதும் அவரது தாய் மற்றும் தம்பி மீதும் கிரிஜா பாண்டியன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதன் பேரில் வழக்குப்பதிவு செய்யபட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதால் ஈஸ்வரனின் ராணுவ வேலையும் பறிபோனது.

இதையடுத்து கிரிஜாபாண்டி அவரது பெற்றோருடன் பேசக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில், உறவினர்கள் பஞ்சாயத்து பேசி இருவரையும் மீண்டும் சேர்த்து வைத்தனர்.

தன் மகள் கணவனுடன் வாழ்ந்தால் போதும் என்ற நோக்கத்தில் கிரிஜா பாண்டியனின் பெற்றோருடன் மகளுடனான பேச்சுவார்த்தையை முறித்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், தனது மகள் கணவரால் சித்திரவதைக்கு ஆளாவதாக கிரிஜா பாண்டியன் தந்தைக்கு உறவினர்கள் மூலமாக தெரியவந்தது.

இதையடுத்து அவர், வனச்சாலை பகுதியில் இருந்த ஈஸ்வரின் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் ஈஸ்வரனும் அவரது குடும்பத்தினரும் அங்கு இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மகளை காணவில்லை என போலீசில் புகார் அளித்தார்.

அதன் பேரில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு ஈஸ்வரனின் குடும்பம் பதுங்கியிருந்த இடத்தை அறிந்து அவர்களை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் ராணுவ வேலை பறி போன ஆத்திரத்தில் ஈஸ்வரன் தனது மனைவியை அடித்து கொன்றதும் அவரது தாய் மற்றும் சகோதரரின் உதவியுடன் சடலத்தை சாக்குபையில் கட்டி முல்லை பெரியாற்றில் வீசியதும் தெரியவந்தது.

யாருக்கும் சந்தேகம் ஏற்பட்டு விட கூடாது என்பதற்காக மாதம் ஒரு வீடு வீதம் 10-க்கு மேற்பட்ட வீடுகள் மாறியதும் அம்பலமாகியது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நியூஸ் ஜெ.செய்திகளுக்காக தேனி மாவட்ட செய்தியாளர் ராதாகிருஷ்ணன்.

Exit mobile version