உச்ச நீதிமன்ற உத்தரவு கடுமையாக பின்பற்றப்படும் – தலைமைத் தேர்தல் ஆணையர்

அரசியலில் குற்றப்பின்னணி உடையவர்களை தடுக்க உச்ச நீதிமன்ற பிறப்பித்த உத்தரவை கடுமையாக பின்பற்றப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கார், தெலங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 40 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மிசோரம் மாநிலத்துக்கு அடுத்த மாதம் 28-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்நிலையில், அந்த மாநிலத்தில், தேர்தல் ஆணையர்கள் சுனில் அரோரா, அசோக் லவாசா மற்றும் 4 மூத்த அதிகாரிகளுடன் சென்று தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியலை குற்றமற்றவர்களுக்கான இடமாக மாற்றும் வகையில் உச்ச நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்த உத்தரவு பின்பற்றப்படுகிறதா என்பது தீவிரமாகக் கண்காணிக்கப்படும் என்று கூறினார். கிரிமினல் வழக்குகளின் நிலை குறித்து வேட்பாளர்கள் பிரமாணப் பத்திரங்களில் தெளிவாக குறிப்பிட வேண்டும் என்றும், அந்த தகவல்கள் உடனடியாக, தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் எனவும் ஓ.பி.ராவத் தெரிவித்தார்.

Exit mobile version