மருத்துவ படிப்பிற்காக விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று காலை வெளியிடப்படுகிறது.
கடந்த மாதம் 5 ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து கடந்த ஜூன் 7-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்களை அனுப்ப கால அவகாசம் வழங்கப்பட்டது. பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன், மாணவ- மாணவிகள் தங்களுடைய சான்றிதழ் நகல்களை இணைத்து அனுப்ப கடந்த மாதம் 22-ந்தேதி வரை அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், மருத்துவ படிப்பிற்காக விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. விண்ணப்பித்து உள்ள 68 ஆயிரத்து 20 பேரின் விண்ணப்பங்களை சரிபார்த்து தரவரிசை பட்டியல் தயாராக உள்ளது என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது குறித்து, இன்னும் ஓரிரு நாட்களில் அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.