நீட் தேர்வில் கபட நாடகம் – மாணவர்கள் வாழ்க்கையில் ஏன் விளையாடுகிறது திமுக?

கனவுகளை சிதைப்பதை விட பெரிய குற்றங்கள் எதுவும் இருக்கப்போவதில்லை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே! ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கள் வாழ்வின் மிகப்பெரிய லட்சியமான மருத்துவ கனவை அடைய போராடிக்கொண்டிருக்கிறார்கள். வறுமையில் தோய்ந்த தன் குடும்பத்தை மீட்டு, தனது பெற்றோர்களை தலைநிமிர செய்ய வேண்டும் என்ற கனவுடன் சிறகடித்து பறக்க துடிக்கும் மாணாக்களின் சிறகுகளை பிய்த்து எரிய உங்களுக்கு எப்படி மனசு வந்தது? நீட் தேர்வு நாடகத்தில் திமுகவால் நிர்கதியாகி நிற்கும் மாணவர்களின் உள்ளக்குமுறல்கள் தான் இந்த கேள்விகள்.

ஸ்டாலினின் அரசியல் விளையாட்டிற்கு பலிகடா ஆனதென்னமோ மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் தான். `என் பையன் டாக்டராவான்’ என்ற பெற்றோர்களின் பேரவாவை தனது சுய அரசியல் லாபத்திற்காக சுக்குநூறாக்கியிருக்கிறார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். `நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்’ என்று கூவிய திமுக, ஆட்சிக்கு வந்ததும் தனது சித்து வேலையை ஆரம்பித்தது.

`நீட் தேர்வு தான் இல்லையே’ என்று திமுகவை நம்பி அசால்ட்டாக இருந்த மாணவர்களுக்கு தாங்கள் எவ்வளவு பெரிய தப்பை செய்துவிட்டோம் என பொட்டில் அறைந்தார் போல் உணர்த்திவிட்டார் ஸ்டாலின். இனி திமுகவை நம்பவேண்டாம் என சொல்லாமல் சொல்லியிருக்கின்றன அவரது நடவடிக்கைகள். இதோ செப்டம்பர் 12ம் தேதி நீட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுவிட்டது. அமைச்சர்களோ மாணவர்களுக்கு `ஆல் தி பெஸ்ட்’ நல்லா படிங்க என்று எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் வேலையை செவ்வனே செய்துகொண்டிருக்கிறார்கள்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், “நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் தயாராக வேண்டும். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது” என்று கம்பிகட்டிக்கொண்டிருக்கிறார்.

`உங்கள நம்பி தானே நீட்டுக்கு தயாராவதை தாமதப்படுத்தினோம்’ என்று கண்ணீர்மல்க மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு என்ன சொல்லப்போகிறார் விடியல் நாயகன்? நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்ற உண்மையை அறிந்துகொண்டு பெயருக்கு `ஏ.கே.ராஜன்’ குழு ஒன்றை அமைத்து ஆட்டம் காட்டி வருகிறார். இந்த நொடிவரை நீட் தேர்வு நடைபெறுமா? நடைபெறாதா? என்ற தெளிவான பதிலே ஸ்டாலினிடம் இல்லை.

ஏ.கே.ராஜன் கமிட்டி தனது அறிக்கையை தமிழக அரசிடம் சமர்பித்துள்ளது. இந்த பரிந்துரைகளை வைத்து என்ன செய்யப்போகிறது தமிழக அரசு? தேர்வு தேதி நெருங்கி வருகிறது. சிக்கித்திணறும் மாணவர்களின் கனவுகளை பொசுக்கி அதில் குளிர்காயப்போகிறாரா ஸ்டாலின்? ஏகே ராஜன் கமிட்டியின் பரிந்துரைகளை ஒருவேளை தமிழக அரசு ஏற்கவில்லை என்றால் அந்த கமிட்டி எதற்கு? எதற்கு இந்த நாடகம்?… இப்படியான அடுக்கடுக்கான பல்வேறு கேள்விகளை சமூக வலைதளங்களில் எழுப்பி வருகிறார்கள் நெட்டிசன்கள்.

 

 

 

Exit mobile version