15 தீர்மானங்களில் அ.தி.மு.க. செயற்குழு சொன்னதென்ன?

இருமொழிக் கொள்கையில் உறுதி, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு கண்டனம் என்பன உள்ளிட்ட 15 தீர்மானங்கள் அ.தி.மு.க. செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. அவைகளாவன,

1)கொரோனாத் தொற்று காலத்திலும் மக்களின் துயர்துடைக்க அயராது அரும்பணியாற்றிவரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு நன்றியும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2)நாட்டிற்கே முன்னோடியாக, கொரோனா நோய் எதிர்ப்பு பணிகளை சிறப்புடன் அற்றி வரும் தமிழக அரசுக்கும், அரசு ஊழியர்களுக்கும், தன்னார்வத் தொண்டர்களுக்கும், ஊடகப் பணியாளர்களுக்கு நன்றியும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3)கொண்டிருக்கும் சிறப்பான பணிகளின் காரணமாக கொரோனா நோய் தொற்றில் இருந்தும், பொருளாதார சரிவிலிருந்தும் மக்கள் பாதுகாக்கப்பட்டிருப்பதை ஏற்று, கொரோனா நிவாரணத்திற்கும் தடுப்பிற்கும் போதுமான நிதி ஆதாரத்தை தமிழகத்திற்கு வழங்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

4)தமிழக அரசுக்கு மத்திய அரசு தர வேண்டியுள்ள ஜி.எஸ்.டி., நிலுவைத் தொகை மற்றும் பல்வேறு திட்டங்களுக்கான மானியங்களின் நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க மத்திய அரசை செயற்குழு வலியுறுத்தியுள்ளது.

5)கொரோனாவிற்கு பிந்தைய சூழலில் பொருளாதாரத்தை மீட்டெடுத்து மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட பொருளாதார வல்லுநர் ரங்கராஜன் தலைமையில் 24 உறுப்பினர்களைக் கொண்டக் குழுவை அமைத்ததற்கும், பொருளாதார மேம்பாட்டிற்காக புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை மேற்கொண்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு செயற்குழு பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

6)தாய்மொழி தமிழும், உலகத்தோடு உறவாட ஆங்கிலம் எனும் இணைப்பு மொழி என்கிற இருமொழிக் கொள்கையே என்றென்றும் அ.தி.மு.க.-வின் மொழிக் கொள்கை என்றும், எந்த மொழிக்கும் அ.தி.மு.க. எதிரானதல்ல என்ற போதிலும், எந்த மொழியும் திணிக்கப்படுவதை ஏற்க இயலாது என்பதில் உறுதியாக இருப்பதாக தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7)’நீட்’ மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான அகில இந்தியப் பொதுநுழைவை அ.தி.மு.க. ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருவதாகவும், கிராமப்புற ஏழை, எளிய முதல் தலைமுறை மாணாக்கர்கள் மருத்துவக்கல்வி பெறுவதைத் தடுக்கும் வகையிலும், கல்வி வணிகமயமாக்கப்படுவதை ஊக்குவிக்கும் வகையிலும் ’நீட்’ தேர்வு உள்ளதால் அதனை கைவிடுமாறு மத்திய அரசை அ.தி.மு.க. செயற்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், நீட் தேர்வை அமல்படுத்த காரணமாக இருந்த மத்திய கூட்டணி அரசில் அங்கம் வகித்திருந்த தி.மு.க., உண்மையை மறைத்துவிட்டு அரசியல் கபட நாடகமாடுவதை செயற்குழு வன்மையாக கண்டிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

8)பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளியில் பயின்று வரும் மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

9)தமிழகத்தில் கடந்த 9 ஆண்டுகளில் முதற்கட்டமாக 6 புதிய மருத்துவக் கல்லூரிகளையும், அவற்றில் புதிதாக 1,400 புதிய மருத்துவப் படிப்பு இடங்களை உருவாக்கியும், தற்போது 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க நடவடிக்கை எடுத்தும், அடுத்து வரும் ஆண்டுகளில் புதிதாக 1,650 இடங்கள் உருவாக வழி செய்துள்ள அ.தி.மு.க. அரசுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததுடன், திட்டமிட்டவாறு ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து குறுவை சாகுபடி மேற்கொள்ள வழிவகுத்த முதலமைச்சருக்கு செயற்குழு பாராட்டு தெரிவித்துள்ளது.

விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு புதியப் பல்கலைக்கழகம், புதிய கலை&அறிவியல் கல்லூரிகள், பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் தொடங்கி உள்ளமைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் தலைவாசலில், ஆசியாவிலேயே மிகப்பெரிய ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்க ரூ.1,022 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததுடன், தேனி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களைத் தொடங்க நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்கு செயற்குழு பாராட்டு தெரிவித்துள்ளது.

10)இந்திய கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றின் தோற்றமும், வளர்ச்சியும் பற்றி மறுஆய்வுசெய்ய அமைக்கப்பட்டிருக்கும் குழுவில், தமிழகத்தை, சேர்ந்த அறிஞர்களுக்கு இடமளிக்க வேண்டும், கச்சத்தீவு மீட்கப்படவேண்டும், இலங்கை தமிழர் நலன் காக்கப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு கவனம் செலுத்த செயற்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

11) பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய தண்டனைகளை கடுமையாக்கி சட்டத்திருத்தங்கள் செய்யப்பட இருப்பதாக அறிவித்தமைக்கும், 6 புதிய மாவட்டங்களை உருவாக்கியமைக்கும் முதலமைச்சருக்கு செயற்குழு பாராட்டு தெரிவித்துள்ளது.

12) காவிரி – வெள்ளாறு – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு மொத்தமாக ரூ.14,000 கோடி செலவில் பணிகளை செய்து முடிக்க நடவடிக்கை எடுத்துள்ளமைக்காகவும், விவசாயிகளின் நலன் கருதி நடப்பாண்டில் 50,000 பம்பு செட்களுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கியமைக்காகவும் முதலமைச்சருக்கு செயற்குழு பாராட்டு தெரிவித்துள்ளது.

13) காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிகளுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன், மேகதாது அணை திட்டத்தை உரிய நேரத்தில் தடுத்து நிறுத்திய தமிழக அரசை செயற்குழுப் பாராட்டியுள்ளது.

14) தமிழகத்தின் ஒப்பற்ற முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது நினைவிடங்களை அழகுற அமைத்தமைக்கும் ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை அரசு சார்பில் நினைவு இல்லமாக மாற்றியமைக்கும் செயற்குழு நன்றி தெரிவித்துள்ளது.

15) அ.இ.அ.தி.மு.க. உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றுபட்ட சிந்தனையோடும் ஒற்றுமையாய்ப் பணியாற்றி, தமிழ்நாட்டில் மீண்டும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் பொற்கால ஆட்சி மலர்ந்திட அயராது உழைப்போம் என செயற்குழுவில் சூளுரைக்கப்பட்டது.

Exit mobile version