தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரில் கார் புரோக்கர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தில் குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்…
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஆச்சிமடத்தை சேர்ந்தவர் விக்ரமாதித்திய ராஜபாண்டி. இவர் கார் புரோக்கர். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் மீது ஏற்கனவே சென்னை, தஞ்சாவூர் திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களில் கார் திருட்டு வழக்குகள் உள்ளது. இவருக்கும் சங்கரன்கோவில் வன்னிக்கோனேந்தலை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மனைவி சித்ராவுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சித்ராவை, ராஜபாண்டி புதியம்புத்தூரில் தனது நண்பர்களான ராமர், சக்திவேல் ஆகியோர் உதவியுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்க வைத்துள்ளார். அங்கு இருவரும் கள்ளத்தனமாக குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதில் ராமர் கார் ஓட்டுனர் என்பதால் கார் வாங்குவது, விற்பது தொடர்பாக ராஜபாண்டி வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றதில் ராமருக்கும், சித்ராவிற்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தெரியவரவே ராஜபாண்டி, சித்ராவை கண்டித்துள்ளார்.
இதனால் ராஜபாண்டியை கொலை செய்ய ராமர் மற்றும் சித்ரா இணைந்து சதிதிட்டம் தீட்டி கடந்த அக்டோபர் 15ம் தேதி ராஜபாண்டிக்கு மது வாங்கி கொடுத்துள்ளனர். மயக்கம் தலைக்கு ஏறியதும் அவரை வெட்டி கொலை செய்து தலையை புதியம்புத்தூரில் உள்ள கிணற்றிலும், உடலை தட்டப்பாறையிலுள்ள ஒரு கல்குவாரியில் தேங்கியுள்ள நீர் குட்டையில் வீசியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தென்காசியில் நடந்த வாகனசோதனையின் போது காவல்துறையிடம் ராமர் சிக்கியுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் உடல் மற்றும் தலை இருக்கும் இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய ராமர், சித்ரா, ராமன் மனைவி லெட்சுமி முத்துகனி, சக்திவேல் ஆகிய5 போரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.