சொத்துக்காக கணவனை கடத்தி ஆள்வைத்து அடித்த மனைவி – சென்னையில் பரபரப்பு!

போரூர் அருகே சொத்துக்காக கணவனுக்கு மயக்கமருந்து கொடுத்து மனைவியே கடத்தி சென்று தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, போரூர் அடுத்த முகலிவாக்கத்தைச் சேர்ந்தவர் 42 வயதான முத்து. இவர் புதுப்பேட்டையில் சொந்தமாக மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். கடந்த 1-ம் தேதி முதல் இவரை காணவில்லை என உறவினர்கள் மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் கடந்த 6 ஆம் தேதி வண்டலூரில், காரில் தான் இருப்பதாக உறவினர்களுக்கு முத்து தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து வண்டலூர் சென்று உடலில் காயங்களுடன் இருந்த முத்துவை மீட்டு வீட்டிற்கு அழைத்து வந்த உறவினர்கள், இதுகுறித்து மாங்காடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். முத்துவிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், முத்துவுக்கு திவ்யா என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்து இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருவதுள்ளது.

இந்நிலையில், கடந்த ஒன்றாம் தேதி கடையில் வேலை செய்துகொண்டிருந்த முத்துவை அவரது மனைவி திவ்யா, சமாதானம் பேச வேண்டும் என்று கூறி காரில் திருமழிசைப் பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு இருச்சக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் மற்றும் மனைவியும் சேர்ந்து முத்துவுக்கு மயக்கமருந்து கொடுத்து அவரை வேலூருக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு ஒரு வீட்டில் அடைத்துவைத்து சொத்தை தன் பெயருக்கு மாற்றி தரவேண்டும் என்று சரமாரியாக தாக்கியுள்ளனர்.

பிறகு 4 நாட்கள் கழித்து வண்டலூர் பகுதியில் தன்னை இறக்கி விட்டுச் சென்றதாக முத்து வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் முத்து கடத்தப்பட்ட பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

மேலும், தலைமறைவாக உள்ள முத்துவின் மனைவி மற்றும் அவரது தம்பி ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Exit mobile version