கடத்தல் நாடகமாடிய சிறுவன் – இரண்டு மணிநேரத்தில் அதிரடியாக மீட்ட காவல்துறை

தந்தைத் திட்டியதால், பள்ளி மாணவன் நண்பர்களுடன் சேர்ந்து கடத்தல் நாடகம் ஆடிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஜாம்பஜார் பகுதியைச் சேர்ந்தவர் டோலாராம். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்களும் உள்ளனர். ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட இவரது மூத்த மகன் தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 7-ம் தேதி தனது மூத்த மகனை காணவில்லை என ஜாம்பஜார் சட்டம் ஒழுங்கு பொறுப்பு ஆய்வாளர் சந்திர மோகனிடம் இரவு 9:30 மணி அளவில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் தனது மகனின் செல்போனில் இருந்து ஒரு அழைப்பு வந்ததாகவும் அதில் உங்கள் மகனை கடத்திவிட்டதாகவும், திருப்பி ஒப்படைக்க ரூ.10 லட்சம் தர வேண்டும் என்று மிரட்டல் விடுத்ததாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் புகார் கொடுத்த சில நிமிடங்களில் காவல்துறையினர் மாணவன் படித்த டியூசன் சென்டருக்கு சென்று விசாரித்தபோது, மாணவர் ஆட்டோவில் ஏறிச் சென்று விட்டதாகத் தெரிவித்துள்ளனர். அதன்படி அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவான ஆட்டோ எண்ணை வைத்து விசாரித்ததில், மாணவனுடன் சேர்ந்து 2 பேரை திருவல்லிக்கேணியில் இறக்கிவிட்டதாக ஆட்டோ ஓட்டுநர் தெரிவித்தார்.

மாணவனின் செல்போன் சிக்னலும் திருவல்லிக்கேணி பகுதியில் இருந்து வந்ததால், அந்த பகுதி முழுவதும் சோதனையிட்ட காவல்துறையினர் வாலாஜா சாலையில் உள்ள சிதம்பரம் விளையாட்டு மைதானம் அருகே நின்று கொண்டிருந்த பள்ளி மாணவனை மீட்டனர். மாணவனிடம் விசாரித்ததில் தன்னை காரில் கடத்தி வந்த சிலர் திருவல்லிக்கேணி அருகே தள்ளி விட்டு சென்றதாக கூறியுள்ளான். காவல்துறையினர் மாணவனை மிரட்டிக் கேட்டதில், தனது தந்தை திட்டியதால் நண்பர்கள் இருவருடன் சேர்த்து கடத்தல் நாடகமாடியதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மாணவனை பெற்றோரிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். புகார் அளிக்கப்பட்ட இரண்டு மணி நேரத்தில் மாணவனை மீட்ட காவல்துறையினரின் செயல் பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.

Exit mobile version