இளைஞர் கொலையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு துப்பு கிடைத்து மனைவி மற்றும் கள்ளக்காதலன் கைது

 

தென்காசி அடுத்த குத்துக்கல்வலசை பகுதியில் இளைஞர் கொலை செய்து புதைக்கப்பட்ட வழக்கில், அவரது மனைவியையும், கள்ளக்காதலனையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை பகுதியைச் சேர்ந்த ஐயப்பன்- அபிராமி தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

34 வயதான அபிராமி, அழகுநிலையம் ஒன்றை நடத்தி வந்த நிலையில், ஐயப்பன் கேபிள் டிவியில் பணியாற்றி வந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஐயப்பன் உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அபிராமிக்கு தென்காசியைச் சேர்ந்த மெக்கானிக் காளிராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

20 வயதான காளிராஜை 2வது திருமணம் செய்து கொண்ட அபிராமி, அதே பகுதியைச் சேர்ந்த 39 வயதான மாரிமுத்து உடன் முறை தவறிய உறவு வைத்துக்கொண்டார்.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த காளிராஜை, அபிராமியும், மாரிமுத்துவும் 3 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்து தோட்டத்தில் புதைத்துவிட்டனர்.

காளிராஜின் தாயார் மகனை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

ஆனால், இதைக் கண்டுக்கொள்ளாத அபிராமியும், மாரிமுத்தும் எதுவுமே நடக்காதது போல் திருமணம் செய்து கொண்டு உல்லாசமாக வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் காளிராஜின் கொலை குறித்த அறிந்த நபர் ஒருவர், இந்த கொலை குறித்து வேறொரு நண்பரிடம் போதையில் உளறியுள்ளார்.

இந்தத் தகவல் போலீஸாரின் காதுகளுக்கு எட்டவே, அபிராமியையும், மாரிமுத்துவையும் பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது காளிராஜை கொன்றதையும், தோட்டத்தில் புதைத்ததையும் அவர்கள் வாக்குமூலமாக அளித்தனர்.

பின்னர், காளிராஜின் உடல் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்பு தோண்டி எடுக்கப்பட்டு, ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், அபிராமி, மாரிமுத்து இருவரையும் கைது செய்தனர்.

 

Exit mobile version