உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபலங்கள் யார் யார்?

கொரோனா பாதிப்பில் சாமானியர்களைப் போலவே அரசியல் மற்றும் திரைத்துறைப் பிரபலங்களும் தப்பவில்லை… உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபலங்கள் யார் யார்?  என்று பார்க்கலாம்…


முஹம்மது மிர்முஹம்மதி

கடந்த 2ஆம் தேதி, ஈரான் நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவரும், அந்நாட்டின் முன்னாள் தலைவர் அயாத்துல்லா அலி கமேனியின் பிரதான ஆலோசனை குழுவில் இடம்பெற்றிருந்த முஹம்மது மிர்முஹம்மதி என்பவர் கொரோனா வைரஸ் உயிரிழந்ததாக ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பாத்தேமேஹ் ரஹ்பர்

ஈரான் தலைநகர் டெஹ்ரான் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த பாத்தேமேஹ் ரஹ்பர் என்ற பெண் கடந்த 7 ஆம் தேதி கொரோனா தாக்கத்தால் உயிரிழந்தார்.

நடீன் டோரிஸ்

கடந்த 11 ஆம் தேதி, கொரோனா வைரசால் இங்கிலாந்தின் சுகாதாரத்துறை பெண் அமைச்சரும், கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.யுமான நடீன் டோரிஸ் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக அறிவித்தார்.

ஜஸ்டின் ட்ரூடோ

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி கிரிகோரிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை பிரதமரின் தகவல் தொடர்பு இயக்குனர் கேமரான் அகமது தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் தனிமையில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறார். மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட உள்ளார்.

ஐரீன் மன்டெரோ

ஸ்பெயின் நாட்டு சமத்துவத்துறை அமைச்சர் ஐரீன் மன்டெரோவுக்கு கொரோனோ வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால், அவர் தனது கணவரும், ஸ்பெயின் நாட்டின் துணைப் பிரதமருமான பப்லோ இக்லேசியஸ் உடன் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

பீட்டர் டட்டன்

ஆஸ்திரேலியா நாட்டின் உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன், தமக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவருக்கும் மருத்துவ உதவிகள் தொடங்கி உள்ளன.

டாம் ஹாங்ஸ்

ஆஸ்கார் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகரும் ‘டாவின்சி கோட்’ உள்ளிட்ட படங்களின் கதாநாயகனுமான டாம் ஹாங்ஸ் தமக்கும், தனது மனைவியும் நடிகையுமான ரீட்டா வில்சனுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். இவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர்.

அதிபர் டிரம்ப் மற்றும் போப் ஆண்டவர்

அதே நேரத்தில், கத்தோலிக கிறிஸ்தவர்களின் தலைவர் போப் ஆண்டவருக்கும், அமெரிக்க அதிபர் டிரம்புக்கும், பிரபல சீன நடிகர் ஜாக்கிசானுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக வதந்திகள் வெளியாகின. ஆனால், அவை மறுக்கப்பட்டதால் வதந்திகள் அடங்கின.

Exit mobile version