கொடநாடு விவகாரத்தில் திமுகவின் சதித் திட்டங்களை சட்ட ரீதியாக தவிடு பொடியாக்குவோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த பூவிருந்தவல்லியில் மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் 102வது பிறந்த நாள் பொதுகூட்ட விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர், காலத்தால் அழியாத திட்டங்களை கொடுத்தவர் எம்ஜிஆர் என்று புகழாரம் சூட்டினார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவும் மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதை அவர் சுட்டிக் காட்டினார். கொடநாடு விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கொலைக்குற்றவாளிகள் என்று தெரிவித்த முதலமைச்சர், திமுகவின் சதிகளை சட்ட ரீதியாக முறியடிப்போம் என்று சூளுரைத்தார்.
தமிழக அரசு செயல்படுத்திவரும் மக்கள் நலத் திட்டங்களை பட்டியலிட்ட முதலமைச்சர் பழனிசாமி, திமுக தனது ஆட்சி காலத்தில் சாதித்தது என்ன என்று கேள்வி எழுப்பினார். மேலும் ஆட்சியில் இருந்த போது, கிராமங்களுக்கு செல்லாத எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், தேர்தலுக்காக மக்களை நாடி வருவதாகவும் முதலமைச்சர் குற்றம்சாட்டினார்.