பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.58,000 கோடி மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் ஒரு லட்சம் கோடிக்கு மேலாக ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகிறது.
ஆனால் இந்த ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை எனவும், ரிலையன்ஸ் நிறுவனத்தை டசால்ட் நிறுவனம் தேர்வு செய்ததில் தங்களின் தலையீடு இல்லை என்றும் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன் போன்றோர் மறுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் பிரதமர் மோடி ரபேல் போர் விமான ஒப்பந்த விவரங்களை மறைக்கிறார் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா, உதிரிபாகங்கள் தயாரிக்கும் பணியை அரசின்
எச்.ஏ.எல். நிறுவனத்துக்கு வழங்காமல் தனியார் நிறுவனத்துக்கு ஏன் வழங்கப்பட்டது என்பதை பிரதமர் மோடி மட்டுமே அறிவார் என்றார். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி,இந்த விஷயம் பற்றி பேசுவதற்கு பதில் மவுனம் சாதிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ரபேல் போர் விமான ஒப்பந்த விவரங்களை பிரதமர் மோடி மறைப்பதாக குற்றம் சாட்டிய அவர், பிரதமருடைய மவுனம் பல்வேறு கேள்விகளை எழுப்புவதாகவும் கூறியுள்ளார். ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் நாட்டுக்கு பயணம் செய்து டசால்ட் நிறுவன அதிகாரிகளை சந்தித்து பேசியது ஏன்? என்பதை விளக்கவேண்டும் என்றும் ஆனந்த் சர்மா வலியுறுத்தியுள்ளார்.