காந்தியின் வாழ்க்கையில் மதுரை ஏற்படுத்திய மாற்றம் என்ன ?

காந்தியின் பங்கு சுதந்திர போராட்டத்தில் எந்த அளவிற்கு முக்கியமோ. அதேபோல் அவரது வாழ்க்கையில் முக்கிய திருப்பமாக அமைந்தது மதுரை. காந்தியின் வாழ்க்கையில் மதுரை ஏற்படுத்திய மாற்றம் என்ன ?

ஆங்கிலேய அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டும் பெரும் முயற்சியில் இந்தியா முழுவதும் காந்தியடிகள் பயணம் மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக கடந்த 1921-ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி மதுரைக்கு வந்தார். மதுரையைச் சுற்றியிருந்த பல்வேறு ஊர்களுக்கும் கிராமங்களுக்கும் பயணம் செய்து பரப்புரை மேற்கொண்ட அவர், உள்ளூர் காங்கிரஸ்காரர்கள் ஏற்பாட்டின் பேரில் மதுரை மேலமாசி வீதியிலுள்ள வடமாநிலத்தைச் சேர்ந்த ராம்ஜி- கல்யாண்ஜி என்பவரின் வீட்டின் மேல்மாடியில் தான் தங்கினார்.

செப்டம்பர் 22ம் தேதி தங்கியிருந்த அறையை விட்டு வெளியே வந்த போது காந்தியை பார்த்து ஒரு கணம் வியப்படைந்தனர் மக்கள். காரணம் அன்று முதல் அரையாடை அணிவதென்று சபதமெற்றார். அதே நாள் மாலை மதுரை -ராமநாதபுரம் சாலையில் நடைபெற்ற பொது கூட்டத்தில் முதன் முதலாக அரையாடையுடன் உரையாற்றினார்.

முறையாக காந்தியடிகளின் நினைவைப் போற்றும் விதமாக, இந்தியாவிலேயே முதன் முதலாக மதுரையில் தான் கடந்த 1959ம் ஆண்டு காந்தி நினைவு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. காந்தி அருங்காட்சியகம் வைகை ஆற்றின் தென்பகுதியில் சுமார் 13 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் கட்டடங்கள் கி.பி.1700ம் ஆண்டில் ராணிமங்கம்மாள் ஆட்சியில் கட்டப்பட்டதாகும்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நீதிமன்றமாகவும், நீதிபதிகள் குடியிருப்பாகவும் பயன்படுத்தப்பட்டது. மகாத்மாவை அரை ஆடை அணியச் செய்த இடம் மதுரை. எனவே, அவர் மறைவுக்குப் பின் மதுரையில் காந்தி நினைவு அருங்காட்சியகம் அமைந்தது.

இதில் முக்கியமானவர்கள் மதுரை காந்தி என அழைக்கப்பட்ட என்.எம்.ஆர். சுப்பராமனும், காந்தி கிராம நிறுவனர் டாக்டர் செளந்தரம்மாளும் குறிப்பிடத்தக்கவர்கள். காமராஜர் முதல்வராக இருந்தபோது காந்தி அருங்காட்சியகத்துக்கு 13 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கி புதிய பகுதிகளையும் கட்ட உதவினார். இதை அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு 1959ம் ஆண்டு திறந்து வைத்தார். அருங்காட்சியகத்தின் முதல் மேல் தளத்தில் உள்ள காட்சிக்கூடத்தில் காந்தியடிகள் சுடப்பட்டபோது அணிந்திருந்த ரத்தக்கறை படிந்த ஆடைகள், காலணி, இறுதிக்காலத்தில் பயன்படுத்திய கை ராட்டை, மூக்குக் கண்ணாடி என அவரது அனைத்துப் பொருள்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

காந்தியடிகளின் அஸ்தியும் இங்குள்ள அமைதிப் பீடத்தில் வைத்து காக்கப்பட்டு வருகிறது. பொன்னிறத்தில் இருந்த காந்தி அருங்காட்சியக கட்டடத்தின் நிறம், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்புதான் வெள்ளை நிறமாக மாற்றப்பட்டது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சர்வசமய பிரார்த்தனை இங்கு நடத்தப்பட்டு வருகிறது. காந்தியடிகள் தங்கிய குடிசை மாதிரி தற்போது நவீன காலத்துக்கேற்ப கட்டடமாக மாற்றப்பட்டுள்ளது.

Exit mobile version