ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நேற்று நடைபெற்ற உலககோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது.
12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் 42-வது லீக் போட்டியில், ஜேசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி குல்பாதீன் நையிப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டு விளையாடியது. ஒரே ஒரு வெற்றியை மட்டும் பெற்றிருந்த மேற்கிந்திய தீவுகள் அணி தொடர்ச்சியாக 5 தோல்விகளை சந்தித்திருந்தது.
அதேபோல், விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்த ஆஃப்கானிஸ்தான் ஆறுதல் வெற்றி பெற தீவிரம் காட்டியது. இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க ஆட்டக்காராக களம் இறங்கிய கிறிஸ் கெயில் 7 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் எவின் லீவிஸ் 58 ரன்னிலும், ஷை ஹோப் 77 ரன்னிலும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். நிகோலஸ் பூரன் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். 50 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட்டுகளை இழந்த மேற்கிந்திய தீவுகள் அணி 311 ரன்கள் குவித்தது.
இதைத் தொடர்ந்து ஆட தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் நையிப் 5 ரன்களில் ஆட்டமிழக்க, ரஹ்மட் ஷா நிதானமாக ஆடி 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய இக்ரம் அலி சிறப்பாக விளையாடி 93 பந்துகளில் 86 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்தவர்களில் ஸட்ரன் மற்றும் அஸ்கர் அஃப்கன் தவிர மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால், 50 ஒவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அந்த அணியால் 288 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
23 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. இந்த இரு அணிகளும் ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்து விட்டது குறிப்பிடத்தக்கது.