தஞ்சை மற்றும் செய்யாறில் 211 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 15 மெகாவாட் இணை மின் உற்பத்தி நிலையங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 95 கோடியே 71 லட்சம் மதிப்பீட்டில் இணை மின் உற்பத்தி நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதேபோன்று தஞ்சை மாவட்டம் குருங்குளம் கிராமத்தில் உள்ள அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் 115 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பில் இணை மின் உற்பத்தி நிலையம் கட்டப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
மீனவர்களின் இழுவலை படகுகளை மாற்றி ஆழ்கடல் மீன்பிடி படகுகளாக்கும் திட்டத்தின் கீழ், 3 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் 4 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கட்டப்பட்டன. இதனை ராமநாதபுரத்தை சேர்ந்த மீனவ பயனாளிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். 18 கோடியே 7 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார்.
உயர் கல்வித்துறை சார்பில் உசிலம்பட்டி அரசு பல்வகை தொழில் நுட்பக்கல்லூரியில் 10 கோடியே 69 லட்சம் ரூபாய் செலவில் வகுப்பறை உள்ளிட்ட கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். மேலும் தேனி, சேலம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உள்ள அரசு கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் 67 கோடியே 25 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
கடலோரப் பேரிடர் அபாயம் குறைப்புத் திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு 66 கோடியே 14 லட்சம் ரூபாய் செலவில் VHF கையடக்க தொழில் நுட்ப கருவிகள் வழங்கப்பட்டது. மேலும் 3 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் மீனவ குழுக்களுக்கு செயற்கை கோள் தொலைபேசிகள் மற்றும் நேவ்டெக்ஸ் கருவிகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்