தமிழகத்தில் பின்பற்றப்படும் நடைமுறைகள் மற்றும் சிறப்பான திட்டங்களை, தெலுங்கானாவில் செயல்படுத்தியுள்ளதாக அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை செனாய் நகரில், மூன்றாவது சித்த மருத்துவ திருவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில், தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் ஸ்ரீபத் யெஸ்ஸோ நாயக் மற்றும் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், சித்த மருத்துவ விழா மலரை, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டார். பின்னர் விழாவில் பேசிய அவர், தான் ஆளுநராக பதவியேற்ற காலக் கட்டத்தில், தெலுங்கானா மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததாகவும், உடனடியாக தமிழக அரசின் மருத்துவ திட்டங்களை கேட்டறிந்து, தெலுங்கானாவில் நிலவேம்பு கசாயத்தை கொடுக்க நடவடிக்கைகள் எடுத்ததாகவும் கூறினார். தற்போது தெலுங்கானாவில் டெங்கு முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கைகளுக்கு பாராட்டும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய ஆயுஷ் இணையமைச்சர் ஸ்ரீபத் யெஸ்ஸோ நாயக், அம்மா சஞ்சீவி மருத்துவ பெட்டகத்தை தமிழக அரசு இலவசமாக வழங்கி, குழந்தை இறப்பு விகிதத்தை குறைத்துள்ளதாக கூறினார். மேலும், சித்த மருத்துவத்தின் மூலம் தமிழக அரசு, டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தி சாதனை படைத்துள்ளதாகவும் பாராட்டு தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக அரசின் திட்டங்களை பாராட்டிய தெலுங்கானா ஆளுநர் மற்றும் மத்திய அமைச்சருக்கும் அரசின் சார்பில் நன்றி தெரிவித்ததோடு, இதனால் தமிழக அரசு பெருமையடைவதாக தெரிவித்தார்.