திருமூர்த்தி அணையில் இருந்து பாலாறு படுகை நான்காம் மண்டலப் பாசனப் பகுதிகளுக்கும், தளி வாய்க்கால் பாசனத்துக்கும் செப்டம்பர் 25ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்துக்குத் தண்ணீர் திறந்துவிட விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கோரிக்கையை ஏற்றுத் திருமூர்த்தி அணையில் இருந்து பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் பாலாறு படுகை நான்காம் மண்டலப் பாசனப் பகுதிகளுக்கு செப்டம்பர் 25ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளார். இதேபோல் தளி வாய்க்கால் பாசனத்துக்குத் திருமூர்த்தி அணையில் இருந்து செப்டம்பர் 25ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளார். இதனால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மொத்தம் 96,854 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் எனக் குறிப்பிட்டுள்ளார். விவசாயிகள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி உயர்விளைச்சல் பெற வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.